Wednesday, November 13, 2024

Karl Max Ganapathy யின் பதிவு :

சமீப காலங்களில் ஆண் பெண் உறவுகளில் நாம் அடைந்திருக்கிற சீர்கேடு குறித்து நண்பர்கள் பேசிக்கொண்டிருந்தோம். அது எப்போது சரியாக இருந்திருக்கிறது என்கிறீர்களா? அதுவும் சரிதான். இருந்தாலும் அதில் நடந்துகொண்டிருக்கும் மாறுதல்களை நாம்தானே கவனப்படுத்த வேண்டியிருக்கிறது.

இரண்டு வாரங்களுக்கு முன்பு டாக்டர் சரவணன் அவரது மகனை பாண்டிச்சேரி மருத்துவக் கல்லூரி ஒன்றில் சேர்த்துவிட்டு வருகையில், மாணவர்களை விட மாணவிகள்தான் அதிகம் இருந்தார்கள் என்று குறிப்பிட்டிருந்தார். மேலும், இன்னும் சில வருஷங்களில் மருத்துவமனைகளில் ஆண் மருத்துவர்களை விட பெண் மருத்துவர்களே அதிகமாக இருக்கக் கூடும் என்று சொல்லியிருந்தார். இது ஒரு பக்கம்.

சென்ற வாரம் அமெரிக்காவில் ஒரு ஆய்வு முடிவு வெளியாகியிருந்தது. அவர்களது Human Index ஆண்களுக்கான work space எப்படி பெண்களால் கபளீகரம் செய்யப்படுகிறது என்பதைப் பற்றி சொல்கிறது. அவர்கள் ஒன்றும் அடித்துப் பிடுங்கவில்லை. தங்களுக்குக் கிடைக்கும் வாய்ப்பை மிகச்சரியாகப் பயன்படுத்திக்கொள்கிறார்கள் என்கிறது அவ்வாய்வு. மேலும், உடல் உழைப்பு சாராத வேளைகளில், ஆண்களின் விகிதாச்சாரம் குறைந்துகொண்டே போகிறது, இது ஆண் - பெண் சமத்துவத்தில் பாரதூரமான வேறுபாட்டைக் கொண்டுவரும் என்று எச்சரிக்கிறார்கள்.

இந்தியாவில், குறிப்பாக முன்னேறிய மாநிலங்களில் இதுதான் இன்றைய நிலைமை. இந்தத் தரவுகளின் பின்னுள்ள இன்னொரு முக்கியமான அம்சத்தை நான் கவனப்படுத்த விரும்புகிறேன். இது குறிப்பாக இந்திய அளவிலானது, அதனாலேயே அதைத் தமிழக அளவில் வைத்து நாம் புரிந்துகொள்ள முயல்வோம்.

தமிழக ஆண்கள் அதுவும் இளைஞர்கள், டீன் ஏஜ் ஆண்கள், சிறுவர்களிடம் நான் காண்கிற ஒரு சமீபத்திய பண்பு, ஆண் சார்ந்த சுபாவத்தை அவர்கள் வேகமாக இழந்துகொண்டு வருகிறார்கள் என்பதே. ஆண்தன்மை அல்லது masculinity என்பதை வெறும் வன்முறையோடு அல்லது அதிகாரத்தோடு பிணைத்து புரிந்துகொள்ளும் பிழையை நாம் செய்கிறோம். அது அப்படியல்ல. உடல் ரீதியான பலத்திற்க்கும் நமது அக ரீதியான செயலூக்கத்திற்கும் தொடர்புண்டு. பொலிடிகல் கரெக்ட்னஸோடு இந்த யதார்த்ததைப் போட்டு குழப்பிக்கொள்ளக் கூடாது.

ஆண் தன்மை என்பது முன்னின்று செயல்படுவது, உரிமை கோருவது, பொறுப்பேற்பது என்பதுடன் தொடர்புடையது. இந்தப் பின்னணியில் ஆண்கள் ஈடுபட்ட, ஈடுபடுகிற சுரண்டல் இந்த ஆண் என்கிற தன்னிலையில் உப விளைவாக இருந்தது. எல்லாவற்றிலும் விதி விலக்குகள் இருப்பது போல இதிலும் கூட ஆண் சார்ந்த சுபாவம் எதையும் வரித்துக்கொள்ளாமலேயே, சுரண்டலில் ஈடுபடுகிற ஒரு தரப்பு உண்டு. அதையும் கணக்கில் எடுத்துக்கொண்டே நாம் இந்த விவகாரத்தை திறந்த மனதுடன் விவாதிக்க வேண்டும்.

இன்றைய சூழலில் ஆண்கள் வரித்துக்கொள்கிற பெண் தன்மை ஒரு முக்கியமான சீர்கேடு. நாம் சில பத்தாண்டுகளாக வரித்துக்கொண்ட பொலிடிகல் கரெக்ட்னஸின் உபவிளைவு இது. எதிலும் முடிவெடுக்காத தன்மை, எல்லாவற்றிலும் சார்ந்திருக்கும் சுபாவம் போன்றவை இளைஞர்களிடம் வளர்ந்திருக்கின்றன. முக்கியமாக பொறுப்பேற்கும் தன்மையிலிருந்து விலகியிருக்கிறார்கள். 

இதன் ஆபத்தான கட்டத்தை நான் வேலைத்தளத்தில் காண்கிறேன். ஒரு தவறு நடந்துவிட்டால், ஆம் நான்தான் அதைச் செய்தேன் என்று ஒத்துக்கொள்கிற தன்மை குறைந்திருக்கிறது. எல்லாத் தவறுகளுக்கும் காரணங்களை வெளியில் தேடுகிற "highly protective attitude" ஐ ஆண்கள் கைக்கொள்கிறார்கள். இது பெரும்பாலும் நமது அன்றாட வாழ்வில் நாம் பெண்களிடம் காணும் சுபாவம். 

இதில் நகைமுரண் என்னவென்றால் அந்தரங்கமாக, ஆண்களின் இந்த சுபாவ மாற்றம் குறித்து பெண்கள் அதிருப்தியடைகிறார்கள் என்பதே உண்மை. Dependency என்று வருகையில், அதில் திளைப்பதும் ஆசுவாசமடைவதும் பெண்களே. அதற்காக அவர்கள் சிறு வன்முறையை, சுரண்டலை சகித்துக்கொள்பவர்களாக இருக்கிறார்கள். இதைப்பற்றி இந்தத் துறை நிபுணர்களே மேலும் விளக்க முடியும். நான் எனது அனுமானங்களையே இங்கு சொல்கிறேன். ஆண்களைப் பொறுத்த வரையில் தனது masculinity வழியாக அடைகிற சாகஸத்தையும் அதன் பொருட்டே சுமக்க நேர்கிற கூடுதல் பொறுப்புக்கும் முகம் கொடுப்பவர்களாக இருக்கிறார்கள். இந்த காம்போவில் இப்போது உடைப்பு ஏற்படுகிறது.

இந்த சுபாவ மாற்றம் தனி மனித உறவுகளில் நிகழ்கிற பிறழ்வுகளுக்கு எந்த அளவுக்கு காரணமாக இருக்கிறது என்பது முக்கியமானது. இன்றைய நவநாகரீக பெண்ணுக்கு, மிக நல்ல, பெண் தன்மை கொண்ட ஒரு ஆண், வெறும் செக்யூரிட்டியை மாத்திரம் உறுதிப்படுத்த முடியும். ஆனால் அவளது completeness ஐ அவனால் ensure பண்ண முடியாது. இது நுட்பமானது. நல்லவனாக இருந்தாலும் அவன் சொம்பைதான். ஆளுமையான பெண்ணாக இருந்தாலும் ஆணை வசீகரிக்கும் திறனற்ற ஒருத்தி சொம்பைதான். தம்மளவில் அதிருப்தி கொண்ட இணையர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போவது அதனால் தான். இது குறித்து வெளிப்படையாக பேச, விவாதிக்க நமக்கு வெளி இல்லை. இருக்கும் சொற்ப வெளியையும் நமது பொலிடிகல் கரெக்ட்னஸ் மனதுக்கு பணயம் வைத்து இழந்திருக்கிறோம். இன்றைய சோஷியல் மீடியா அதன் சிறப்பான உதாரணம். 

கல்வி குறித்த நமது பார்வையில், மதம் குறித்த நமது கண்ணோட்டத்தில், காமம் மீதான நமது approach ல் இதெல்லாம் எதிரொலிக்கிறது. அதிகாரத்தில் ஆண் தன்மையை அடைய விரும்புகிற யுவதிகள், பொறுப்பு என்று வருகையில் பெண் தன்மையிலேயே உறைந்து போகிறார்கள். அப்படியான சூழலில் அவர்களுக்குப்  போட்டியே இல்லாமல் ஆகிறது. அவர்களுடன் பொருதுகிற, அவர்களது சாகஸத்தைத் தூண்டுகிற ஆண்களின் இருப்பு, அதே ஆண்கள் கைக்கொள்ளும் பெண் தன்மையால் நிறமிழந்து போகிறது.இரண்டு தரப்பும் எளிதில் சலிப்படைகிறார்கள். இந்த சலிப்பே கற்பனையான கிளுகிளுப்பை நோக்கி நகரும் செயலாக மாறுகிறது. பாண்டஸி வலைத்தளங்களின் ஆதிக்கம் விரிவடைவதற்கும் இதற்கும் தொடர்பு இருக்கிறது. அது வன்முறையாக இருந்தாலும் சரி, காமமாக இருந்தாலும் சரி.

நன்றி : Face Book 

Wednesday, June 26, 2024

இது படம் பற்றிய விமர்சனம் அல்ல!

ஒரு விமானி 

விமானம் கிளம்பி இருபது நிமிடத்தில் விமானத்தில் கோளாறு ஏற்பட்டதை கவனிக்கிறார். 

அருகில் உள்ள விமான நிலையத்தில் இறக்கமுடியாது என்பதை அறிந்து கொண்ட அவர் அவசரத்துக்கு ஹெட்சன் ஆற்றில் விமானத்தை இறக்கி விடுகிறார். 

ஏன் அருகில் உள்ள விமானநிலையத்தில் விமானத்தை இறக்கவில்லை ஆற்றில் இறக்கினீர்கள் என்று விசாரணை நடக்கிறது. 

அவருக்கு என்ன நிலைமை ஏற்பட்டதோ அதே மாதிரி நேரக்கணக்கில் ஒரு ஆய்வகத்தில் விமான மாதிரியை ஒட்டி பார்க்கிறார்கள். 

அதன்படி அவருக்கு ஏற்பட்ட இக்கட்டான நேர நிமிடங்களில் அவரால் அருகில் உள்ள விமான நிலையத்தில் இறங்கி இருக்க முடியும் என்று நிருபிக்கிறார்கள். 

அவரிடம் கடுமையாக இப்படி கேட்கிறார்கள். 

”நீங்கள் பழுதடைந்த விமானத்தை அருகில் இருக்கும் விமானநிலையத்தில் எளிதாய் தரையில் இறக்கி இருக்க முடியும். அவசரப்பட்டு ஹட்சன் ஆற்றில் இறக்கியது உங்கள் தவறு. எங்களுடைய மாதிரி (Model) பைலட்கள் அதை செய்து பார்க்கும் போது அவர்களால் முடிகிறது. கம்யூட்டரும் அது சாத்தியம் என்றே சொல்கிறது பைலட் சல்லி (Sully)”

அதற்கு பைலட் சல்லி சொல்கிறார். 

“கம்யூட்டருக்கும், விமான மாதிர் ஒட்டிகளுக்கும் இந்த விமான நிலையத்தில் இறங்கப் போகிறோம் என்று தெளிவாக தெரியும். அவர்கள் பின்னால் எந்த உயிருள்ள மனிதர்களும் அமர்ந்திருக்கவில்லை.

ஆனால் என் நிலைமையை யோசித்துப் பார்த்தீர்களா. 
பின்னால் அத்தனை மனிதர்கள் இருந்தார்கள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு உயிர்கள். அவர்களுக்கு ஒவ்வொரு குடும்பம் இருக்கும். 
அத்தனை மக்களின் உயிருக்கு பொறுப்பாக விமானத்தில் இருக்கும் போது என் மூளை எப்படி பரபரத்து இருந்திருக்கும் என்று யோசித்தீர்களா?  

எந்த விமானநிலையத்தில் கீழ் இறங்க என்ன செய்ய என்று யோசித்து முடிவுக்கு வர கொஞ்சம் நேரம் ஆகியிருக்குமே அந்த படபடத்த பரபரத்த  நேரத்தை கழித்து இந்த கம்யூட்டரிலும், விமான ஒட்டி மாதிரிகளையும் செய்து பார்க்கச் சொல்லுங்கள்”

அவர் சொன்னது மாதிரி சல்லி யோசிக்கும் நேரத்தை கழித்து மீதமிருக்கும் நேரத்தில் விமானத்தை விமான நிலையத்தில் இறக்க முடியுமா என்று Simulate செய்து பார்த்தார்கள். 

முடியவில்லை. 

ஹட்சன் ஆற்றில் இறக்குவதுதான் அந்த சமயத்தில் சிறந்த முடிவு என்று முடிவுக்கு வருகிறார்கள். 

அதன் சல்லியை கடுமையாக விசாரித்தவர்கள் சொல்கிறார்கள்... 

“எங்களை மன்னியுங்கள் பைலட் சல்லி. யோசிக்கும் நேரத்தை குறைத்து கம்யூட்டரும், விமான மாதிரி ஒட்டிகளும் ஒட்டும் போது விமானம் விமானநிலையத்தின் தரையில் மோதி வெடிப்பதாகவே காட்டுகிறது. நீங்கள் உண்மையில் திறமையான பைலட் என்பதை கண்டுகொண்டோம். நீங்கள் அச்சமயத்தில் ஹட்சன் ஆற்றில் விமானத்தை இறக்கியது மிகச் சிறந்த முடிவு. உங்களை தவறாக விசாரித்தமைக்கு மன்னியுங்கள்” 

இந்த பைலட்டை எப்படி Model களை வைத்து, Simulation செய்து பார்த்து, கம்யூட்டர் வைத்து விசாரித்தார்களோ அப்படித்தான் நாம் அனைவரும் ஒரு காலத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை குறிப்பாக தீவிர போராட்டத்தில் ஈடுபட்டவர்களை பார்க்கிறோம். 

காலநேரத்தில் வசதியாக தள்ளி நின்று இருந்து கொண்டு எந்த பதட்டமும் இல்லாமல் 

”அவர் அப்படி செய்திருக்கலாமே ... இவர் இப்படி செய்திருக்கலாமே ... இப்படி செய்தது தவறு... இந்த முடிவை எடுத்தது தவறு “ என்று சொல்கிறோம்.

ஆனால் அந்த முடிவை அந்த தலைவரோ போராட்டக்குழுவினரோ எவ்வளவு இக்கட்டான நெருக்கடியில் எடுத்திருப்பார்கள். 

எவ்வளவு அழுத்தத்தில் அந்த முடிவை எடுத்திருப்பார்கள் என்று அந்த காலகட்ட பதட்டத்தை கொஞ்சம் கற்பனை செய்து பார்த்தால்தான் அவர்களை அவர்கள் போராட்டத்தை புரிந்து கொள்ள முடியும். 

இப்படித்தான் அடக்குமுறைக்கு எதிராக உலகெங்கும் நடந்த நடந்து கொண்டிருக்கும் போரட்டங்களை புரிந்து கொள்ள வேண்டும். 

அந்த அடக்குமுறையின் அதிக அழுத்ததை புரிந்து கொள்ளாமல் , 

அந்த பதட்டத்தை புரிந்து கொள்ளாமல், 
அதற்கு ரியாக்சன் கொடுக்கும் போராட்டங்களை மட்டும் Computer பாணியில் ஆய்வு செய்வது என்பது திரும்ப திரும்ப தவறான பார்வையையே கொடுக்கும்.

நன்றி : Vijay Bhasharvijay 
                (இது ஒரு face book பதிவு)

Wednesday, June 19, 2024

பழையன கழிதலும் புதியன புகுதலும்

இன்றைய ஹிண்டுவில் ஒரு கட்டுரையில் 'to feed two birds with one crumb' எனும் பதத்தை கவனித்தேன். அதாவது ஒரே செயலில் இரண்டு நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்கு நாம் 'ஒரே கல்லில் இரண்டு மாங்காய்கள்' என்று சொல்வோம். அதற்கு நிகராக இது பயன்படுத்தப்பட்டுள்ளது. 

ஆனால் ஆங்கிலத்தில் வழக்கமாக பயன்பாட்டில் இருக்கும் சொலவடை இதுவல்ல. 'To kill two birds with one stone' என்பதுதான் பொதுவான பயன்பாடு. இந்த மாதிரி பல்வேறு சொலவடைகளை பீட்டா இயக்கம் ரொம்ப நாளாக விமர்சித்துக் கொண்டு வருகிறது. இந்த மாதிரியான மொழிப் பயன்பாடுகள் விலங்குகளுக்கு எதிரான மனித வன்முறைகளை இயல்பாக ஆக்குகின்றன எனும் இவர்களின் குற்றச்சாட்டில் நியாயம் இருக்கவே செய்கிறது. 

இந்த anti-animal languageக்கு மாற்றாக பீட்டா சில புதிய சொலவடைகளை பரிந்துரைத்திருந்தது: 

- 'Bring home the bacon' என்பதற்கு பதில் 'Bring home the bagels'
- 'Taking a bull by the horns'  என்பதற்கு பதில் 'Take a flower by the thorns'
- 'Being the guinea pig'  என்பதற்கு பதில்  'Be the test tube'
- 'Beating a dead horse'  என்பதற்கு பதில்  'Feed a fed horse'

போன்றவை பீட்டா நம்மிடையே முனவைத்திருக்கும் மாற்றுகள். இவை கொஞ்ச காலம் வரை வெறும் பரிந்துரையாக மட்டுமே இருந்தது தற்போது இயல்பான மொழிப் பயன்பாட்டுக்கு வந்திருக்கின்றன என்பது இன்றுதான் தெரிய வந்திருக்கிறது. 

எழுபதுகளில் பெண்களுக்கு எதிரான ஆணாதிக்க மொழிப் பயன்பாடுகளில் மாற்றங்களைக் கொண்டு வர முயன்று வெற்றி கண்டோம். Mankind, Chairman போன்றவை மாறி Humankind, Chairperson என்றெல்லாம் மாறின. பின்னர் 2000களில் LGBTQIA+ குழுவினருக்கு எதிராக இருக்கும் பதங்கள் மாற்றங்கள் கண்டன. Gender Neutral டாய்லெட், gender-neutral personal pronouns என்று LGBTQIA+ குழுவினரை உள்ளடக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. 

தற்போது இது விலங்குகளுக்கு எதிரான மொழி வன்முறையை நீக்கும் இடத்துக்கு வந்து நின்றிருக்கிறது என்பது மன நிறைவாக இருக்கிறது. 

There is hope for humankind, after all. 

- ஸ்ரீதர் சுப்ரமணியம்

நன்றி :Sridhar Subramaniam(இது ஒரு Face Book பதிவு)

Saturday, June 1, 2024

ஏன் நமது சாப்பாடு மோசமாக இருக்கிறது?

மோசமான உணவு நம்மை மன அழுத்தத்திற்கு ஆளாக்குவதுடன் பல நோய்களையும் உண்டு பண்ணுகிறது. எது மோசமான உணவு என்றால் எது மலிவானதோ, எளிதாக கிடைக்கிறதோ அதுவே மோசமான உணவு. கடந்த சில ஆண்டுகளில் நான் புரிந்துகொண்ட முக்கியமான உண்மை இது. உடல் நலத்தை நாம் பொருளாதாரத்தில் இருந்து பிரித்துப் பார்க்க முடியாது.

இன்று அரிசி, கோதுமை விலை குறைவு, அதை விட மைதா விலை மலிவு. பலவிதமான காய்கறிகளையும் பனீர், டோபு, சிக்கன், சீஸ் உள்ளிட்ட புரதங்களையும் சேர்த்த சாலட்டைப் பண்ணுவதற்கு ஆகும் செலவுக்கு இரண்டு நாளைக்கு சோறு, குழம்பு வைத்து சாப்பிடலாம் (காய்கறி விலை மிக மிக அதிகமாகி விட்டது; சிக்கன் கிலோ முன்னூறைத் தாண்டி விட்டது. அரிசி விலை என்றுமே உயராது. இலவசமாகவே கிடைக்கிறது. மைதா விலை ஏறுவதே இல்லை.). ஒருவருக்கு ஒருநாளைக்கான 60-80 கிராம் புரதத்தை அடைய செய்யும் செலவுக்கு பத்து நாட்களுக்கு மாவுச்சத்து உணவுகளை ஜாலியாக சாப்பிடலாம். மேலும் காய்கறிகளை வாங்கி கழுவி நறுக்கி வாயிலிட்டு மென்று சாப்பிடும் சிரமத்துக்கு ரெண்டு தோசை ஊற்றி சாப்பிடுவது, புரோட்டாவை பிய்த்துப் போட்டு முழுங்குவது எளிது. மூன்று முட்டைகள் சாப்பிட்டால் ஒருநாளைக்குத் தேவையான புரதத்தின் நான்கில் ஒரு மடங்கே கிடைக்கும். நீங்கள் கவனமாக தேடிப் பிடித்து சாப்பிடாவிட்டால் மொத்த நாளுக்குமான புரதத்தை அடைய முடியாது. ஆனால் ஒருநாளைக்கான மாவுச்சத்தை ஒரே மதிய வேளை சாப்பாட்டில் அடைந்துவிடலாம்.  

இது சாப்பாட்டுக்கு மட்டுமல்ல, அனேகமாக எல்லாவற்றுக்கும் பொருந்தும். இந்த உலகில் பயனற்றவை சுலபமாக, மலிவாக கிடைக்கும். கடந்த ஒரு நூற்றாண்டின் மிகப்பெரிய கண்டுபிடிப்பு இந்த மலிவான உணவை சுவையாக மாற்ற முடிந்ததும், அதன் உற்பத்தியை தொழில்மயமாக்கி அதை உறையிலிட்டு செயற்கை சுவையூட்டிகளையும் அதிக சர்க்கரையை / உப்பை சேர்த்து மலிவான விலையில் நமக்குத் தர முடிந்ததுதான். இதனால் இந்தியாவில் சாப்பிட உணவின்றி பட்டினி கிடப்பவர்கள் இன்று அனேகமாக இல்லை, ஆனால் சத்தான உணவு இன்றி நோயுறுபவர்கள் அதிகம். அமெரிக்காவில் இதைக் குறித்து செய்த ஆய்வில் வேலையின்றி தெருவில் வசிப்பவர்கள் அங்குள்ள பீட்ஸா துரித உணவுக் கடைகளில் இருந்து மீதமாகும் உணவை வாங்கி சாப்பிடுவதால் மிகவும் உடல் பருத்து பல நோய்களுடன் வாழ்வதைப் பற்றி கண்டறிந்தார்கள். அதாவது நாம் பகட்டு உணவாக கருதுவதே இன்று ஏழைகள் உண்டு உடல் நலிவது. இன்னொரு பக்கம், மேல்மத்திய வர்க்கமும் பணக்காரர்களும் இந்த சுவையான மலிவான உணவை விட்டு விலகி சுவையற்றதாக கருதப்படும் காய்கறிகள், சுட்ட கறி, மாவுச்சத்து குறைவான உணவுகளை நோக்கி செல்கிறார்கள். ஏழைகளில் இருந்து மத்திய வர்க்கம் வரை இன்று அதிகமாக கொழுத்து நீரிழிவு, மாரடைப்பு ஆகிய நோய்களால் தவிக்க மேல்மத்திய, மேற்தட்டினர் அதிக ஆரோக்கியமாக வாழ்கிறார்கள்.

இந்த மலிவான உணவைப் பற்றிப் பேசும் போது இன்று உடலுழைப்பு குறைந்துவிட்டதால் மாவுச்சத்து தேவைக்கு மிகுதியாகிறது எனக் கூறுகிறோம். இது உண்மையல்ல. 300-400 கிராம் மாவுச்சத்தானது கடுமையாக உடலுழைப்பில் ஈடுபடுகிறவர்களுக்கும் அதிகமானதே. எந்த உடலுழைப்பாளியாலும் இந்தளவுக்கு உணவை எடுத்துக்கொண்டு வேலை செய்ய முடியாது, சாப்பிட்டவுடன் தூங்கவே தோன்றும். ஐம்பது ஆண்டுகளுக்கு முன் உடலுழைப்பாளிகள் ஒருமணி நேரத்திற்கு ஒருமுறை நொறுக்குத்தீனி, சாக்லேட், பிரியாணி, சரக்கு, பொரித்த கறித்துண்டுகள் என நள்ளிரவு இரண்டு மணிவரை உண்டார்களா? இல்லை. 2-3 முறைகள் தான் அவர்கள் உண்டார்கள். என்னதான் அரிச்சோறு உண்டிருந்தாலும் அவர்களால் 160 கிராமுக்கு மேல் மாவுச்சத்தை உண்டிருக்க முடியாது (அரைக்கிலோ சோறிலே கூட140 கிராம் மாவுச்சத்து தான்.). பிரச்சினை உடலுழைப்பு குறைந்ததல்ல நமது மலிவான உணவு உற்பத்தி மிகுந்துவிட்டதே. சூமோ மல்யுத்த வீரர்கள் ஒருநாளைக்கு 7000-10000 கலோரிகள் (சிலநேரங்களில் 20,000 கலோரிகள்) உட்கொள்வார்கள் எனில் நம்மில் பலரும் 5000 கலோரிகளாவது குறைந்தது சாப்பிடுகிறோம். நமது உணவுச்சந்தை அனைவரையும் சூமோ மல்யுத்த வீரர்களை போல சாப்பிட வைக்கிறது. நம் உடலால் இதை கையாள முடியவில்லை. சூமோ மல்யுத்த வீரர்களைப் போல நம்மால் 6-8 மணிநேரங்கள் உடற்பயிற்சி, விளையாட்டுப் பயிற்சி செய்யவும் முடியாது. பிரச்சினை நம் உடலுழைப்பு இன்மை அல்ல. 

இன்றைய நோய்வாய்ப்பட்ட நவீன சமூகம் மலிவான உணவு சந்தையின் சோதனை எலிகள் மட்டுமே. இந்த தொழில்மயமாக்கப்பட்ட உணவுச்சந்தையில் இருந்து விடுபடும் போதே நம்மால் தரமான உணவை நோக்கி கவனம் செலுத்த முடியும். காய்கறிகளின், பழங்களின், புரத உணவின் விலையை குறைக்க முயல முடியும். ஜப்பானியர்கள் சோயா உணவுகளை புரதத்துக்காக பயன்படுத்துவது இதற்கு நல்ல உதாரணம் - அவர்கள் சோயாவை டோபூ, மிஸோ, நாட்டோ என பலவிதங்களில் எடுத்துக்கொள்கிறார்கள். ஒருநாளைக்கு தேவையான புரதத்தின் பாதியை அனேகமாக அவர்கள் சோயாவில் இருந்து பெறுகிறார்கள். மிருக கறியைப் போல் அன்றி சோயா உணவில் கொழுப்பு மிக மிக குறைவு. (சோயாவில் உள்ள ஐசோபிளேவேன்கள் ஆபத்து விளைவிப்பது மிக மிக அதிகமாக தினமும் உட்கொள்ளும் போது மட்டுமே. ஜப்பானியர்களுக்கு அதனால் எஸ்டிரோஜென் பிரச்சினையே ஏற்படுவதில்லை. பாரம்பரிய ஜப்பானியர் நீண்ட ஆயுள் வாழ்கிறார்கள்.) அவர்களுடைய மரபான உணவு புரதத்தை அதிகமாக இவ்வாறு சோயாவில் இருந்து இயற்கையாக கிடைக்கும் மீனில் இருந்து பெற்றுத் தருகிறது. நார்ச்சத்தும் ஊரில் கிடைக்கும் காய்கறிகளை அதிகமாக எடுத்துக்கொள்வது வழி கிடைக்கிறது. மேலைநாட்டு உணவுகளின் தாக்கம் வரும்வரை ஜப்பானியருக்கு சத்தான உணவுக்கு செலவு செய்ய வேண்டிய தேவையிருக்கவில்லை. சத்தான உணவுகளை மலிவாக அவர்கள் உற்பத்தி செய்தார்கள். ஆனால் மேற்கத்திய மலிவான உணவுகள் பரவிட, மூன்றாம் உலக நாட்டு அரசுகள் அரிசி, கோதுமை உற்பத்தியிலே கவனம் செலுத்த சத்துணவுகளின் (காய்கறிகள்) உற்பத்தி குறைந்து விலை அதிகமாகியது (நம்மூரில் பசுமைப்புரட்சி). முதலாம் உலக நாடுகளின் பொருளாதாரம் சரிய, வேலைகள் குறைய அங்கும் சத்தான உணவு விலை அதிகமாகி பீட்ஸா, சாண்ட்விட்ச் ஒப்பீட்டளவில் மலிவாகியது. இப்போது இந்தியாவில் ஒரு கிலோ கேரட் வாங்கும் பணத்தில் பாதியிருந்தாலே நீங்கள் ஒரு பெரிய கப் ஐஸ்கிரீம் சாப்பிடலாம். மூன்று பாக்கெட் கிரீம் பிஸ்கட் / ஐந்து கேக்குகள் / பெரிய சாக்லேட் பார் சாப்பிடலாம். கவனியுங்கள் - சர்க்கரை, மைதா, எண்ணெய்யால் செய்யப்படும் அவசியமற்ற உணவுகளின் விலை பெரிய மாற்றமின்றி தொடர்கிறது. ஆனால் காய்கறி, பழம், தண்ணீர் என அவசியமானவற்றின் விலை அதிகமாகி விட்டன. பொதுவாக தேவை அதிகமாக விலை அதிகமாகும் என்பார்கள். இது உண்மையெனில் சர்க்கரை, மைதாவின் விலையே உலகெங்கும் அதிகமாக வேண்டும். ஆனால் எது குறைவாக எடுத்துக்கொள்ளப்படுகிறதோ அதன் விலையே அதிகமாகிறது. ஏனெனில் சந்தை அதன் உற்பத்தியை திட்டமிட்டு குறைக்கிறது.
 ஒரு கிலோ வெள்ளரிக்காயின் விலைக்கு நான்கில் ஒரு மடங்கு இருந்தால் இரண்டு சின்ன பாக்கெட் மாகி நூடுல்ஸ் வாங்கலாம். ஒரு கிலோ நாட்டுத்தக்காளியின் விலைக்கு 12 சின்ன பாக்கெட் மாகி நூடுல்ஸ் வாங்கலாம். நமது உணவு சந்தையும் அரசும் சேர்ந்து ஏன் துரித உணவை மட்டும் அனைவராலும் வாங்கக் கூடிய அளவுக்கு மலிவாக வைத்திருக்கிறது? ஒரு நல்ல கடையில் இரண்டு தோசை சாப்பிடும் பணத்தில் நீங்கள் ஆறு வேளைகள் துரித நூடில்ஸ் சாப்பிட முடியும் எனில் இந்த சந்தை நம் சாமான்யர்களிடம் சொல்வதென்ன? அரசும், சந்தையும் நமது பெரும்பான்மை மக்கள் சமூகத்தை வெறுமனே மைதா, சர்க்கரை, ரசாயன நிறமூட்டி, சுவையூட்டிகளை மட்டும் சாப்பிட விரும்புகின்றன. இன்று சின்ன குழந்தைகளில் இருந்து இளைஞர்கள் வரை பசிக்கும் போது சாப்பிட விரும்புவது மாகி நூடுல்ஸ் எனும் விஷத்தை தான். சுவையினால் மட்டுமல்ல அதன் விலையினாலும் தான். சமச்சீராக உணவு உண்ட மரபான சமூகங்களையும் இவர்கள் பருவச்சூழலை மாற்றி, அரசின் திட்டங்களை திருத்த வைத்து, சந்தையின் போக்கை மாற்றி மலிவான சத்தில்லாத உணவுகளை மட்டும் உண்ண வைத்து கெடுத்துவிட்டார்கள். 

இந்த சந்தையை ஆதரிப்பவர்கள் இரண்டு பெரும் இந்திய பஞ்சங்களைக் குறிப்பிட்டு இன்று நாம் பசியில்லாமலாவது இருக்கிறோமே, நவீன சந்தை நம்மை காப்பாற்றவே செய்துள்ளது என்பார்கள். ஆனால் ஒரு வசதியான உண்மையை மறைத்துவிடுவார்கள் - அந்த பஞ்சங்கள் காலனிய ஆட்சியாளர்களால் செயற்கையாக ஏற்படுத்தப்பட்டவை. வெள்ளையர்கள் வரும் முன்பு இங்கு அப்படியான பஞ்சங்கள் இருக்கவில்லை. காலனியாதிக்க அரசு நமது வளத்தை முழுமையாக சுரண்டி, உற்பத்தி முறைகளை ஒழித்து, பொருளாதாரத்தை நிர்மூலமாக்கியதாலே நாம் மீண்டு வர அரை நூற்றாண்டுக்கு மேலானது. அல்லாவிடில் நாம் உலகின் வளமான தேசங்களில் ஒன்றாக இருந்திருப்போம். நவதாராளவாதம் வழியாக தொடுக்கப்படும் இரண்டாம் நவகாலனியாதிக்க யுத்தமே இந்த மலிவான உணவுகளால் நம் சந்தையை நிறைக்கிறது. அதுவே நம்மை நோயாளிகளாக, பலவீனர்களாக ஆக்குகிறது. என்ன வித்தியாசம் எனில், முன்பு போல் அன்றி, நாடுகள் குறித்த பாரபட்சமின்றி அமெரிக்கர்களையும், இங்கிலாந்தினரையும் நம்மை இந்த தாராளவாத உணவு லாபி ஒரே போல அழிக்கிறது. உலகம் முழுக்க மெலிந்த எலும்புக் கூடுகளுக்குப் பதில் கொழுத்து நோய்வாய்ப்பட்டவர்கள். முன்னவர்கள் விரைவில் செத்தார்கள் எனில் பின்னவர்கள் மெல்ல மெல்ல துன்புற்று சாகிறார்கள்.

நன்றி : ஆர். அபிலேஷ்.
( இது ஒரு face book பதிவு )

Friday, April 19, 2024

கார்ல் மார்க்ஸ்

ஜெயமோகன் துவக்கம் தமிழ்ச்சூழலில் மார்க்ஸ் ‘பாலியல் குற்றமிழைத்தார்’ என மஞ்சள் பத்திரிக்கையின் துப்பறியும் பாணியில் எழுதுகிற-பேசுகிற எவருக்கும் அது தொடர்பாக அசலாக பதிவு செய்யப்பட்ட எழுத்துக்களில் பரிச்சயமேயில்லை.  200 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஒருவரது வாழ்க்கையை இன்றைய ‘மீடூ’ காலத்து மதிப்பீடுகளை வைத்து அவதூறு செய்துகொண்டிருக்கிறார்கள். 

மார்க்ஸ் மீது பாலியல் ‘குற்றச்சாட்டு’ என ஒரு புண்ணாக்கும் இல்லை. சம்பந்தப்பட்ட ஹெலன் டெமூத்தோ அல்லது அவரது மகனோ மார்க்ஸ் பற்றி கருத்துச் சொன்னதற்கு எந்த ஆதாரமும் கிடையாது. மார்க்ஸ் ஸகாலர்ஷிப்பில் இது பற்றி நிறைய இடைவெளிகள் இருக்கின்றன. வரலாற்றாசிரியர்கள் பின்வந்த பெண்ணிலைவாதம், வரலாற்றில் மௌனமாக்கப்பட்ட பெண் அனுபவம் போன்றவற்றை முன்வைத்துத்தான் இப்பிரச்சினையை அணுகியிருக்கிறார்கள். 

திருமணம் மீறிய உறவுகள் தண்டனைக்குரிய ‘குற்றம்’ இல்லை என்பது வெகுசாதாரணமான உண்மை. மார்க்சில் உள்ள ‘ஆண்பெருமித’ உணர்வை விமர்சிக்கும் ஷிலா ரோபத்தம் தனது நூலின் தலைப்பை ‘மை டியர் மார்க்ஸ்’ என்றுதான் வைத்திருக்கிறார். இங்கிலாந்தின் பிரிஸ்ட்டல் பல்கலைக் கழக அரசியல்துறைப் பேராசிரியர் டெரல் கார்வர் இது பற்றிய பனுவல்களை ஆராய்ந்து அவர் சொல்வது இதுதான் : மார்க்ஸ் இத்தகைய உறவு கொண்டிருந்தார்; என்பதை நிரூபிக்க முடியாது என்பது போலவே, திட்டவட்டமாக அவர் இத்தகைய உறவு கொண்டிருக்கவில்லை எனவும் மறுக்க முடியாது.

மார்க்ஸ் ஸ்காலர்ஷிப்பில் உள்ள இடைவெளிகளை வைத்துச் சொல்லமுடிவது இதுதான். மார்க்ஸ் டெமூத் இடையிலான உறவு 'கன்சென்சுவல்' உறவுதானா அல்லது வீட்டு எஜமானன்-பணியாள் இடையிலான 'அதிகார' உறவா என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை. ஆனால், டெமூத்தின் மகன் ஹென்றி பிறந்த(1851) பின்னும் டெமூத் மார்க்ஸ் வீட்டில்தான் வாழ்ந்தார். மார்க்ஸ் மரணத்திற்கு ஒரு வருடம் முன்பாகவே அவரது மனைவி ஜென்னி இறந்தார்(1881). மார்க்ஸ் மரணத்தின்(1883) பின் டெமூத் எங்கெல்ஸ் வீட்டில் இருந்தார். மார்க்சின் துணைவியார் ஜென்னியின் விருப்பின்படி ஹெலன் டெமூத் மரணமுற்றபோது(1890) அவர் மார்க்ஸ் குடும்பக் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டார். எங்கெல்ஸ் பிற்பாடு மரணமுற்றார்(1895). மார்க்சின் இளைய புதல்வி எலியானர் மார்க்ஸ் தனது காதலன் எட்வர்ட் எவலிங்கின் துரோகத்தினால் தற்கொலை செய்துகொண்டு மரணமுற்றார்(1898).

கார்ல் மார்க்சின் குடும்ப வாழ்வைப் படிக்கிறபோது அவரது வறுமை, அவரது தன்னேரில்லாத மேதைமை, அவரது மனைவியின் பொறுமை, அத்தனைத் துயருடனும் அவரது புதல்வியரின் அரசியல் பிரக்ஞை போன்றன தாளமுடியாத துக்கத்தைக் கொண்டுதருகிறது. இதற்குச் சற்றும் குறையாத வகையில் எங்கெல்சின் இரண்டு மனோரதியமான  காதல்கள் இருக்கின்றன. எலியனார் மார்க்ஸ் தனது மரணம் வரையிலும் தான் நேசித்த ஹெலன் டெமூத்தினது புதல்வன் ஹென்றியின் மீது தீராத அன்பு கொண்டிருந்தார். இதற்கான சாட்சியமாக ஹென்றிக்கு எழுதப்பட்ட அவரது கடிதங்கள் இருக்கின்றன.

எழுந்தமேனியில் எழுதப்படுகிற வியாக்யானங்கள் அல்ல, மாறாகப பனுவல் வாசிப்பின் அடிப்படையிலான தரிசனமே மனித அவலங்களை விளக்கப் பயன்படும். மீடூ கால மதிப்பீடுகளை மார்க்ஸ் பிரச்சினையில் பொருத்தவே முடியாது. உலக அளவில் பொலான்ஸ்க்கி முதல் வெயின்ஸ்டின் வரை, இந்திய-தமிழகச் சூழலில் தேஜ்பால் துவக்கம் வைரமுத்து-கோணங்கி வரை இவர்களால் பாதிக்கப்பட்டவர்கள் ‘தமது அனுபவங்களை எழுத்தில்’ முன்வைத்திருக்கிறார்கள். மார்க்ஸ் பிரச்சினையில் இந்த ஒப்பீடே அபத்தம். மார்க்ஸ் பிரச்சினையை அவர் காலத்தில் திருமணம் மீறிய உறவு சார்ந்து நிலவிய மதிப்பீடுகளை வைத்தே அணுகமுடியும்.

நன்றி : Yamuna Rajendran.(Face Book)