சமீப காலங்களில் ஆண் பெண் உறவுகளில் நாம் அடைந்திருக்கிற சீர்கேடு குறித்து நண்பர்கள் பேசிக்கொண்டிருந்தோம். அது எப்போது சரியாக இருந்திருக்கிறது என்கிறீர்களா? அதுவும் சரிதான். இருந்தாலும் அதில் நடந்துகொண்டிருக்கும் மாறுதல்களை நாம்தானே கவனப்படுத்த வேண்டியிருக்கிறது.
இரண்டு வாரங்களுக்கு முன்பு டாக்டர் சரவணன் அவரது மகனை பாண்டிச்சேரி மருத்துவக் கல்லூரி ஒன்றில் சேர்த்துவிட்டு வருகையில், மாணவர்களை விட மாணவிகள்தான் அதிகம் இருந்தார்கள் என்று குறிப்பிட்டிருந்தார். மேலும், இன்னும் சில வருஷங்களில் மருத்துவமனைகளில் ஆண் மருத்துவர்களை விட பெண் மருத்துவர்களே அதிகமாக இருக்கக் கூடும் என்று சொல்லியிருந்தார். இது ஒரு பக்கம்.
சென்ற வாரம் அமெரிக்காவில் ஒரு ஆய்வு முடிவு வெளியாகியிருந்தது. அவர்களது Human Index ஆண்களுக்கான work space எப்படி பெண்களால் கபளீகரம் செய்யப்படுகிறது என்பதைப் பற்றி சொல்கிறது. அவர்கள் ஒன்றும் அடித்துப் பிடுங்கவில்லை. தங்களுக்குக் கிடைக்கும் வாய்ப்பை மிகச்சரியாகப் பயன்படுத்திக்கொள்கிறார்கள் என்கிறது அவ்வாய்வு. மேலும், உடல் உழைப்பு சாராத வேளைகளில், ஆண்களின் விகிதாச்சாரம் குறைந்துகொண்டே போகிறது, இது ஆண் - பெண் சமத்துவத்தில் பாரதூரமான வேறுபாட்டைக் கொண்டுவரும் என்று எச்சரிக்கிறார்கள்.
இந்தியாவில், குறிப்பாக முன்னேறிய மாநிலங்களில் இதுதான் இன்றைய நிலைமை. இந்தத் தரவுகளின் பின்னுள்ள இன்னொரு முக்கியமான அம்சத்தை நான் கவனப்படுத்த விரும்புகிறேன். இது குறிப்பாக இந்திய அளவிலானது, அதனாலேயே அதைத் தமிழக அளவில் வைத்து நாம் புரிந்துகொள்ள முயல்வோம்.
தமிழக ஆண்கள் அதுவும் இளைஞர்கள், டீன் ஏஜ் ஆண்கள், சிறுவர்களிடம் நான் காண்கிற ஒரு சமீபத்திய பண்பு, ஆண் சார்ந்த சுபாவத்தை அவர்கள் வேகமாக இழந்துகொண்டு வருகிறார்கள் என்பதே. ஆண்தன்மை அல்லது masculinity என்பதை வெறும் வன்முறையோடு அல்லது அதிகாரத்தோடு பிணைத்து புரிந்துகொள்ளும் பிழையை நாம் செய்கிறோம். அது அப்படியல்ல. உடல் ரீதியான பலத்திற்க்கும் நமது அக ரீதியான செயலூக்கத்திற்கும் தொடர்புண்டு. பொலிடிகல் கரெக்ட்னஸோடு இந்த யதார்த்ததைப் போட்டு குழப்பிக்கொள்ளக் கூடாது.
ஆண் தன்மை என்பது முன்னின்று செயல்படுவது, உரிமை கோருவது, பொறுப்பேற்பது என்பதுடன் தொடர்புடையது. இந்தப் பின்னணியில் ஆண்கள் ஈடுபட்ட, ஈடுபடுகிற சுரண்டல் இந்த ஆண் என்கிற தன்னிலையில் உப விளைவாக இருந்தது. எல்லாவற்றிலும் விதி விலக்குகள் இருப்பது போல இதிலும் கூட ஆண் சார்ந்த சுபாவம் எதையும் வரித்துக்கொள்ளாமலேயே, சுரண்டலில் ஈடுபடுகிற ஒரு தரப்பு உண்டு. அதையும் கணக்கில் எடுத்துக்கொண்டே நாம் இந்த விவகாரத்தை திறந்த மனதுடன் விவாதிக்க வேண்டும்.
இன்றைய சூழலில் ஆண்கள் வரித்துக்கொள்கிற பெண் தன்மை ஒரு முக்கியமான சீர்கேடு. நாம் சில பத்தாண்டுகளாக வரித்துக்கொண்ட பொலிடிகல் கரெக்ட்னஸின் உபவிளைவு இது. எதிலும் முடிவெடுக்காத தன்மை, எல்லாவற்றிலும் சார்ந்திருக்கும் சுபாவம் போன்றவை இளைஞர்களிடம் வளர்ந்திருக்கின்றன. முக்கியமாக பொறுப்பேற்கும் தன்மையிலிருந்து விலகியிருக்கிறார்கள்.
இதன் ஆபத்தான கட்டத்தை நான் வேலைத்தளத்தில் காண்கிறேன். ஒரு தவறு நடந்துவிட்டால், ஆம் நான்தான் அதைச் செய்தேன் என்று ஒத்துக்கொள்கிற தன்மை குறைந்திருக்கிறது. எல்லாத் தவறுகளுக்கும் காரணங்களை வெளியில் தேடுகிற "highly protective attitude" ஐ ஆண்கள் கைக்கொள்கிறார்கள். இது பெரும்பாலும் நமது அன்றாட வாழ்வில் நாம் பெண்களிடம் காணும் சுபாவம்.
இதில் நகைமுரண் என்னவென்றால் அந்தரங்கமாக, ஆண்களின் இந்த சுபாவ மாற்றம் குறித்து பெண்கள் அதிருப்தியடைகிறார்கள் என்பதே உண்மை. Dependency என்று வருகையில், அதில் திளைப்பதும் ஆசுவாசமடைவதும் பெண்களே. அதற்காக அவர்கள் சிறு வன்முறையை, சுரண்டலை சகித்துக்கொள்பவர்களாக இருக்கிறார்கள். இதைப்பற்றி இந்தத் துறை நிபுணர்களே மேலும் விளக்க முடியும். நான் எனது அனுமானங்களையே இங்கு சொல்கிறேன். ஆண்களைப் பொறுத்த வரையில் தனது masculinity வழியாக அடைகிற சாகஸத்தையும் அதன் பொருட்டே சுமக்க நேர்கிற கூடுதல் பொறுப்புக்கும் முகம் கொடுப்பவர்களாக இருக்கிறார்கள். இந்த காம்போவில் இப்போது உடைப்பு ஏற்படுகிறது.
இந்த சுபாவ மாற்றம் தனி மனித உறவுகளில் நிகழ்கிற பிறழ்வுகளுக்கு எந்த அளவுக்கு காரணமாக இருக்கிறது என்பது முக்கியமானது. இன்றைய நவநாகரீக பெண்ணுக்கு, மிக நல்ல, பெண் தன்மை கொண்ட ஒரு ஆண், வெறும் செக்யூரிட்டியை மாத்திரம் உறுதிப்படுத்த முடியும். ஆனால் அவளது completeness ஐ அவனால் ensure பண்ண முடியாது. இது நுட்பமானது. நல்லவனாக இருந்தாலும் அவன் சொம்பைதான். ஆளுமையான பெண்ணாக இருந்தாலும் ஆணை வசீகரிக்கும் திறனற்ற ஒருத்தி சொம்பைதான். தம்மளவில் அதிருப்தி கொண்ட இணையர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போவது அதனால் தான். இது குறித்து வெளிப்படையாக பேச, விவாதிக்க நமக்கு வெளி இல்லை. இருக்கும் சொற்ப வெளியையும் நமது பொலிடிகல் கரெக்ட்னஸ் மனதுக்கு பணயம் வைத்து இழந்திருக்கிறோம். இன்றைய சோஷியல் மீடியா அதன் சிறப்பான உதாரணம்.
கல்வி குறித்த நமது பார்வையில், மதம் குறித்த நமது கண்ணோட்டத்தில், காமம் மீதான நமது approach ல் இதெல்லாம் எதிரொலிக்கிறது. அதிகாரத்தில் ஆண் தன்மையை அடைய விரும்புகிற யுவதிகள், பொறுப்பு என்று வருகையில் பெண் தன்மையிலேயே உறைந்து போகிறார்கள். அப்படியான சூழலில் அவர்களுக்குப் போட்டியே இல்லாமல் ஆகிறது. அவர்களுடன் பொருதுகிற, அவர்களது சாகஸத்தைத் தூண்டுகிற ஆண்களின் இருப்பு, அதே ஆண்கள் கைக்கொள்ளும் பெண் தன்மையால் நிறமிழந்து போகிறது.இரண்டு தரப்பும் எளிதில் சலிப்படைகிறார்கள். இந்த சலிப்பே கற்பனையான கிளுகிளுப்பை நோக்கி நகரும் செயலாக மாறுகிறது. பாண்டஸி வலைத்தளங்களின் ஆதிக்கம் விரிவடைவதற்கும் இதற்கும் தொடர்பு இருக்கிறது. அது வன்முறையாக இருந்தாலும் சரி, காமமாக இருந்தாலும் சரி.
நன்றி : Face Book
No comments:
Post a Comment