ஜெயமோகன் துவக்கம் தமிழ்ச்சூழலில் மார்க்ஸ் ‘பாலியல் குற்றமிழைத்தார்’ என மஞ்சள் பத்திரிக்கையின் துப்பறியும் பாணியில் எழுதுகிற-பேசுகிற எவருக்கும் அது தொடர்பாக அசலாக பதிவு செய்யப்பட்ட எழுத்துக்களில் பரிச்சயமேயில்லை. 200 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஒருவரது வாழ்க்கையை இன்றைய ‘மீடூ’ காலத்து மதிப்பீடுகளை வைத்து அவதூறு செய்துகொண்டிருக்கிறார்கள்.
மார்க்ஸ் மீது பாலியல் ‘குற்றச்சாட்டு’ என ஒரு புண்ணாக்கும் இல்லை. சம்பந்தப்பட்ட ஹெலன் டெமூத்தோ அல்லது அவரது மகனோ மார்க்ஸ் பற்றி கருத்துச் சொன்னதற்கு எந்த ஆதாரமும் கிடையாது. மார்க்ஸ் ஸகாலர்ஷிப்பில் இது பற்றி நிறைய இடைவெளிகள் இருக்கின்றன. வரலாற்றாசிரியர்கள் பின்வந்த பெண்ணிலைவாதம், வரலாற்றில் மௌனமாக்கப்பட்ட பெண் அனுபவம் போன்றவற்றை முன்வைத்துத்தான் இப்பிரச்சினையை அணுகியிருக்கிறார்கள்.
திருமணம் மீறிய உறவுகள் தண்டனைக்குரிய ‘குற்றம்’ இல்லை என்பது வெகுசாதாரணமான உண்மை. மார்க்சில் உள்ள ‘ஆண்பெருமித’ உணர்வை விமர்சிக்கும் ஷிலா ரோபத்தம் தனது நூலின் தலைப்பை ‘மை டியர் மார்க்ஸ்’ என்றுதான் வைத்திருக்கிறார். இங்கிலாந்தின் பிரிஸ்ட்டல் பல்கலைக் கழக அரசியல்துறைப் பேராசிரியர் டெரல் கார்வர் இது பற்றிய பனுவல்களை ஆராய்ந்து அவர் சொல்வது இதுதான் : மார்க்ஸ் இத்தகைய உறவு கொண்டிருந்தார்; என்பதை நிரூபிக்க முடியாது என்பது போலவே, திட்டவட்டமாக அவர் இத்தகைய உறவு கொண்டிருக்கவில்லை எனவும் மறுக்க முடியாது.
மார்க்ஸ் ஸ்காலர்ஷிப்பில் உள்ள இடைவெளிகளை வைத்துச் சொல்லமுடிவது இதுதான். மார்க்ஸ் டெமூத் இடையிலான உறவு 'கன்சென்சுவல்' உறவுதானா அல்லது வீட்டு எஜமானன்-பணியாள் இடையிலான 'அதிகார' உறவா என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை. ஆனால், டெமூத்தின் மகன் ஹென்றி பிறந்த(1851) பின்னும் டெமூத் மார்க்ஸ் வீட்டில்தான் வாழ்ந்தார். மார்க்ஸ் மரணத்திற்கு ஒரு வருடம் முன்பாகவே அவரது மனைவி ஜென்னி இறந்தார்(1881). மார்க்ஸ் மரணத்தின்(1883) பின் டெமூத் எங்கெல்ஸ் வீட்டில் இருந்தார். மார்க்சின் துணைவியார் ஜென்னியின் விருப்பின்படி ஹெலன் டெமூத் மரணமுற்றபோது(1890) அவர் மார்க்ஸ் குடும்பக் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டார். எங்கெல்ஸ் பிற்பாடு மரணமுற்றார்(1895). மார்க்சின் இளைய புதல்வி எலியானர் மார்க்ஸ் தனது காதலன் எட்வர்ட் எவலிங்கின் துரோகத்தினால் தற்கொலை செய்துகொண்டு மரணமுற்றார்(1898).
கார்ல் மார்க்சின் குடும்ப வாழ்வைப் படிக்கிறபோது அவரது வறுமை, அவரது தன்னேரில்லாத மேதைமை, அவரது மனைவியின் பொறுமை, அத்தனைத் துயருடனும் அவரது புதல்வியரின் அரசியல் பிரக்ஞை போன்றன தாளமுடியாத துக்கத்தைக் கொண்டுதருகிறது. இதற்குச் சற்றும் குறையாத வகையில் எங்கெல்சின் இரண்டு மனோரதியமான காதல்கள் இருக்கின்றன. எலியனார் மார்க்ஸ் தனது மரணம் வரையிலும் தான் நேசித்த ஹெலன் டெமூத்தினது புதல்வன் ஹென்றியின் மீது தீராத அன்பு கொண்டிருந்தார். இதற்கான சாட்சியமாக ஹென்றிக்கு எழுதப்பட்ட அவரது கடிதங்கள் இருக்கின்றன.
எழுந்தமேனியில் எழுதப்படுகிற வியாக்யானங்கள் அல்ல, மாறாகப பனுவல் வாசிப்பின் அடிப்படையிலான தரிசனமே மனித அவலங்களை விளக்கப் பயன்படும். மீடூ கால மதிப்பீடுகளை மார்க்ஸ் பிரச்சினையில் பொருத்தவே முடியாது. உலக அளவில் பொலான்ஸ்க்கி முதல் வெயின்ஸ்டின் வரை, இந்திய-தமிழகச் சூழலில் தேஜ்பால் துவக்கம் வைரமுத்து-கோணங்கி வரை இவர்களால் பாதிக்கப்பட்டவர்கள் ‘தமது அனுபவங்களை எழுத்தில்’ முன்வைத்திருக்கிறார்கள். மார்க்ஸ் பிரச்சினையில் இந்த ஒப்பீடே அபத்தம். மார்க்ஸ் பிரச்சினையை அவர் காலத்தில் திருமணம் மீறிய உறவு சார்ந்து நிலவிய மதிப்பீடுகளை வைத்தே அணுகமுடியும்.
நன்றி : Yamuna Rajendran.(Face Book)
No comments:
Post a Comment