முத்த அரசியல்
~
டோரதி படத்தின் உச்க்காட்சி . கார்த்தி (ரிஷிகாந்த் ) சுப்புவை (சனந்த்) முத்தமிடுவது. இதை சராசரி ஆண்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. படத்தில் இந்த நிகழ்வு 90 களில் நடைபெறுவதாகக் காட்டுகிறார் இயக்குநர். 2026 மாறியிருக்கிறது! என கார்த்திக் சுப்புராஜ் நினைக்கிறார். ஆனால் இங்கு பலர் இன்னும் 90 களைத் தாண்டவில்லை! என்பதை உணரமுடிகிறது. உலகின் பெரும்பாலான மதங்களில் கலாச்சாரங்கள், ஒரே பாலின ஈர்ப்பு மற்றும் உடல் ரீதியான வெளிப்பாடுகளை பாவமாக, விலக்கப்பட்ட ஒன்றாக (Taboo) போதிக்கின்றன . தலைமுறை தலைமுறையாகக் கடத்தப்பட்ட இந்த நம்பிக்கைகள், இதுபோன்ற காட்சிகளைப் பார்க்கும்போது உடனடி எதிர்ப்பையோ அல்லது அதிர்ச்சியையோ ஏற்படுத்துகிறது. இதன் காரணமாக மனிதர்கள் அனுபவிக்கும் கலாச்சார அதிர்ச்சி , Homophobiaவை (அச்சத்தை) உருவாக்குகிறது.
பொதுச் சமூகம் புரிந்து வைத்திருப்பதுபோல பாலினப் பாத்திரங்கள் என்பவை இயற்கையானவையோ , நிலையானவையோ அல்ல. அவை மொழி, சமூகம் மற்றும் தந்தைவழி அமைப்பால் கட்டமைக்கப்படுபவை. மனித மனமும் அடையாளமும் தொடர்ச்சியாக மாறிக்கொண்டே இருக்கும் இயல்புடையவை. இறுக்கமான பாலின வரம்புகளை உடைத்து, ஒவ்வொரு தனிநபரின் தனித்துவமான வெளிப்பாட்டிற்கு மதிப்பளிப்பதே சமகால கலாச்சாராமாக கருதப்படும். ஆண்மை (Masculinity) மற்றும் பெண்மை (Femininity) என்பவை நிலையான எதிர் எதிர் துருவங்கள் அல்ல. ஆண் மற்றும் பெண் இருவருக்குள்ளும் இந்த இரு தளங்களும் கலந்தே இருக்கின்றன. எனவே, அவை ஒவ்வொரு மனிதருக்குள்ளும் மாறி மாறி வெளிப்படுபவை என்கிறார் ஜூலியா கிறிஸ்துவா . பாலின அடையாளங்கள் என்பவை முடிவுற்ற வடிவம் அல்ல.
மனிதர்கள் தொடர்ந்து உருமாறிக் கொண்டே (Subject-in-Process) இருக்கக் கூடியவர்கள். ஆண் இப்படித்தான் இருக்க வேண்டும். பெண் இப்படித்தான் இருக்க வேண்டும். என்று சமூகம் தீர்மானிக்கும் பாலினப் பாத்திரங்கள் செயற்கையானவை. மனித உணர்வுகளையும் அடையாளங்களையும் அவ்வாறு ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் அடக்க முடியாது.
சமூகம் தனது எல்லைகளைப் பாதுகாத்துக் கொள்ளவும், தனது சட்ட திட்டங்களை நிலைநிறுத்தவும் சில விஷயங்களை 'அருவருப்பானது' அல்லது 'விலக்கப்பட்ட ஒன்றாக' ஒதுக்கி வைக்கிறது. தந்தைவழிச் சமூகம் பெண்களையும், பெண்ணிய உணர்வுகளையும், சில பாலின வெளிப்பாடுகளையும் இவ்வாறு ஒதுக்கி வைப்பதன் மூலமே தனது அதிகாரத் தன்மையைத் தக்கவைத்துக் கொள்கிறது .
விறைப்பு, வீரம், உணர்ச்சிகளை வெளிப்படுத்தாமை (Stoicism) போன்றவையே ஆண்மை, என நம்பும் தந்தைவழிச் சமூக மனம், டோரதிக்கு கார்த்தி தரும் முத்தத்தை ஓர் ஆண் மற்றொரு ஆணுக்குத் தரும் முத்தமாகப் பார்க்கிறது. ஏற்றுக் கொள்ள முடியவில்லை. கார்த்தி,சுப்புவாக
நடிக்கும் இருவர்தாம் ஆண்கள். ஆனால் இப்போது சுப்பு இல்லை. அந்த உடல் டோரதியாக பரிணமித்திருக்கிறது.
அதை சுப்புவாகவே எண்ணவைப்பது
ஆண் மொழியும் அது கட்டமைத்த பண்பாடும்தான். ஒருவேளை சுப்பு டோரதியாக மாறாமல், இருவருமே ஆண் என்கிற நிலையில் , தற்பாலின ஈர்ப்பின் காரணமாக முத்தமிட்டிருந்தாலும் தவறில்லை.