Sunday, June 23, 2013
ஹ்யூகோ சாவேஸ் (1954-2013):ஒரு பிசாசைப் “பிசாசு” என்றழைத்தவர்
சோவியத் யூனியன் மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் வீழ்ச்சி மற்றும் சீனாவின் திசை விலகல் ஆகியவற்றிற்குப் பின் உலகளவில் இடது சாரி அரசியலுக்கு ஒரு ஆதர்சமாக இருந்த சாவேசுக்கு எழுதப்பட்ட ஒரு இரங்கற் கட்டுரையின் தலைப்பு “உலகைக் குலுக்கிய பதினாலு ஆண்டுகள்.” சாவேசின் இந்தப் பதினாலு ஆண்டு கால ஆட்சி (1999 – 2013) உலகைக் குலுக்கியதோ இல்லையோ அமெரிக்காவிற்கும் பிற ஏகாதிபத்தியங்களுக்கும் லத்தீன் அமெரிக்காவில் ஒரு ‘செக்’ வைத்ததென்பது மறுக்க இயலாத உண்மை.
2012 அக்டோபரில் அவர் அதிபர் தெர்தலில் தன்னை எதிர்த்து நின்ற அமெரிக்க ஆதரவாளர் ஹென்ரிக் கேப்ரில்சைக் காட்டிலும் 11 சத வாக்குகளைக் கூடுதலாகப் பெற்று வெற்றி பெற்று மூன்றாம் முறையாக அதிபரான போது மரியாதை நிமித்தமாகக் கூட ஒரு வாழ்த்துச் சொல்லாத அளவிற்கு அமெரிக்கா இறுகிக் கிடந்தது இதற்கொரு சான்று. சாவேசும் சளைத்தவரல்ல. ஈராக் போர் நடந்து கொண்டிருந்த போது ஐ.நா பொது அவையில் தோன்றிய சாவேஸ் முதல் நாள் அந்த மேடையில் அமர்ந்த ஜார்ஜ் புஷ்சைப் பற்றி, “நேற்று இங்கொரு பிசாசு வந்திருந்தது; அதன் கந்தக நெடி இன்னும் குமட்டுகிறது” என்று கூறியதை யாரும் மறந்துவிட இயலாது. சாவேஸ் மீது அவர்கள் கொண்டுள்ள கோபம் அவர் இறந்த பின்னும் குறையவில்லை என்பது இன்று மேற்கத்திய ஊடகங்கள் அவர் குறித்து வெளியிட்டுள்ள இரங்கற் செய்திகள் மற்றும் கட்டுரைகள் சான்று. மிகவும் நுணுக்கமாக அவரைப்பற்றிச் சர்வாதிகரி எனவும் எதிர்க் கருத்துடையவர்களைக் கடுமையாகப் பழி வாங்கியவர் எனவும் அளவுக்கு மீறிப் பேசக் கூடியவர் என்றும் பலவாறும் எழுதப்பட்டுள்ளன. ஆனாலும் சதாம் உசேனைப் போலவோ கடாஃபியைப் போலவோ சாவேசை அமெரிக்காவால் ஒன்றும் செய்துவிட முடியவில்லை. காரணம் அவரை மக்கள் நேசித்தார்கள். ஒவ்வொரு முறையும் அவர் முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது 14 ஆண்டு ஆட்சிக் காலத்தில் குறைந்த பட்சம் 15 முக்கிய தேர்தல்கள் நடைபெற்றுள்ளன. சர்வதேசத் தரத்துடன் முறையாக நடத்தப் பெற்ற தேர்தல்கள் அவை. கியூபா, ஈக்வடார், பொலிவியா, நிகரகுவா ஆகிய லத்தின் அமெரிக்க நாடுகளை ஒன்றிணைத்து அவர் உருவாக்கிய ‘அல்பா” (ALBA) மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளையும் கரிபியன் நாடுகளையும் ஒன்றிணைத்து உருவாக்கிய ‘செலாக்’ (CELAC) முதலான அமைப்புகள் ஏகாதிபத்தியத்தால் எதுவும் எளிதாகச் செய்துவிட இயலாத அளவிற்கு வலிமையான எதிர்ப்பணிகளாக இருந்தன. வெனிசூலாவின் எண்ணை வளம் பெரிய அளவில் உள்நாட்டில் சோஷலிச முயற்சிகளுக்கு மட்டுமின்றி சக லத்தின் அமெரிக்க நாடுகளின் வளர்ச்சிக்கும் பயம்படுத்தப்பட்டது, சவூதி மற்றும் வளைகுடா நாடுகளைப்போல தமது எண்ணை வளத்தின் பயன்களை எல்லாம் அமெரிக்காவில் கொண்டு சென்று குவிக்காமல் சாவேஸ் அவற்றை லத்தீன் அமெரிக்க நாடுகளுக்குள்ளேயே சுழற்சி செய்தார், தன் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தச் செலவிட்டார். அமெரிக்க ரிசர்வில் இருந்து 20 பில்லியன் டாலரைத் திரும்பப் பெற்ற சாவேஸ் 2007க்குப் பின் மட்டும் சக லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு 36 பில்லியன் டாலர் கடனுதவிகள் செய்தார். அவை பெரிய அளவில் திருப்பிச் செலுத்தவும் பட்டுவிட்டன. பன்னாட்டு நிதியத்திற்கு (IMF) இணையாக “பன்னாட்டு மனிதாய வங்கி” ஒன்று உருவாக்குவது பற்றியும் பேசினார். 40 ஆண்டு கால அமெரிக்கப் பொருளாதாரத் தடையால் நலிந்து கிடந்த கியூபாவிற்குப் பெரிய அளவில் எண்ணை வருமானத்திலிருந்து நிதி அளித்து, பதிலாக அங்கிருந்து 40,000 மருத்துவர்கள் மற்றும் தாதியரைப் பெற்று வெனிசூலா மக்களுக்கு மிக மிகக் குறைந்த செலவில் மருத்துவ சேவை கிடைக்க வழி செய்தார். மக்களில் மூன்றில் ஒருவருக்கு இன்று பல்கலைக் கழகம் வரை இலவசக் கல்வி அளிக்கப்படுகிறது. வெனிசூலாவின் எண்ணை வளம் 1.36 ட்ரில்லியன் பாரல்கள் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. உலகின் மிகப் பெரிய இந்த எண்ணை வளத்தைப் பதவிக்கு வந்த கையோடு அரசுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியில் இறங்கிய சாவேஸ், முகிய எண்ணை நிறுவனமான “பெட்ரோலியோஸ் டி வெனிசூலா” வை நாட்டுடமை ஆக்கினார். 2001ல் இயற்றப்பட்ட புதிய சட்டத்தின் மூலம் வெளிநாட்டு நிறுவனங்கள் விற்பனை விலையில் பெறும் பங்கை 84 சததிலிருந்து 70 சதமாகக் குறைத்தார். இப்படிக் கிடைத்த தொகை பெரிய அளவில் சமூக நலச் செலவுக்களுக்குப் பயன்படுத்தப்பட்டது. 2000த்திலிருந்து 2010க்குள் சமூக நலச் செலவுகள் 61 சத்தம் உயர்ந்தது. 1996ல் 71 சதமாக இருந்த ஏழ்மை இப்போது 21 சதமாகக் குறைந்துள்ளது. 2 கோடி மக்கள் சமூக நலத் திட்டத்தால் பயன்பெறுகின்றனர். 2.1 மில்லியன் பேர் முதியோர் உதவித் தொகை பெறுகின்றனர். உணவு இறக்குமதி 90 சதத்திலிருந்து 30 சதமாகக் குறைந்துள்ளது. இன்று அங்கு 1000 பேருக்கு 58 மருத்துவர்கள் உள்ளனர். இப்படி நிறையச் சொல்லலாம். 1970கள் தொடங்கி அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் எடுபிடிகளாக இருந்த சர்வாதிகாரிகளின் நவ தாராளவாதக் கொள்கைகளால் வாழ்வை இழந்திருந்த லத்தீன் அமெரிக்க மக்கள் சாவேசின் வெற்றிக்குப் பின் தொடர்ந்து ஈக்வடார், நிகரகுவா, பொலிவியா என அடுத்தடுத்த நாடுகளில் இடது சாரிச் சாய்வுள்ள கட்சிகளையும் தலைவர்களையும் ஆட்சிக்குக் கொண்டு வந்தனர். சாவேசின் இந்த “21ம் நூற்றாண்டுக்கான சோஷலிச” அணுகல் முறையை இவர்கள் தத்தம் நாடுகளில் வெவ்வேறு மட்டங்களில் செயல்படுத்தினர். சோவியத் யூனியன், கிழக்கு ஐரோப்பிய நாடுகள் மற்றும் சீனப் பாதைகளின் பாரம்பரியங்களை ஏற்றுக்கொண்டு அதே நேரத்தில் அவற்றின் ‘தோல்விகளிலிருந்து’ பாடங்களையும் கற்றுக் கொண்டு 21ம் நூற்றண்டுக்கான ‘புதிய’ சோஷலிசத்தைக் கட்டமைப்பது என்பது இந்த அணுகல்முறைகளின் உள்ளடக்கம். ஒரே நேரத்தில் முந்தைய லத்தீன் அமெரிக்க நவ தாராளவாத அணுகல் முறைகளிலிருந்தும் சென்ற நூற்றாண்டுச் சோஷலிசப் பாதைகளிலிருந்தும் வேறுபட்டதாக இது அமைந்தது. நவ தாராளவாதப் பாதையின் முக்கிய அம்சங்களான சந்தைப் பொருளாதாரம், அதாவது அரசுக் கட்டுப்பாடிலாத சந்தை, அரசுக் கட்டுப்பாடில்லாத பொருளாதாரச் செயல்பாடுகள், உற்பத்தியைக் காட்டிலும் நிதி மூலதனத்திற்கு அதிக முக்கியத்துவம் அளித்தல், வெளிநாட்டு நிறுவனங்களுக்குத் தடையற்ற அனுமதி ஆகியவற்றைச் சாத்தியமானவரை கைவிட்ட இவர்கள் அதே நேரத்தில் பாரம்பரிய மார்க்சீய மற்றும் சோஷலிசக் கட்டுமான அணுகல்முறைகளான பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரம், ஒரு கட்சி ஆட்சிமுறை, கட்சி அதிகாரவர்கத்தின் ஆட்சி, அடிப்படை உரிமைகள் மறுப்பு ஆகியவற்றிற்கு 21ம் நூற்றாண்டு சோஷலிசத்தில் இடமில்லை எனக் கருதினர். அதேபோல சோஷலிச முயற்சிகளுக்கு ஒரு பொது மாதிரி இருக்க முடியாது எனவும் நாட்டுக்கு நாடு இது வெறுபடவேண்டும் எனவும் கூறினர். எல்லாவற்றிற்கும் மேலாக 20ம் நூற்றாண்டின் சோவியத் யூனியனும் மாவோ காலத்திய சீனமும் இல்லாத புதிய உலக ஒழுங்கைக் கணக்கில் கொண்டு இன்றைய சோஷலிச முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றனர். பொலிவியா, ஈக்வடார் போன்றவை வெளிப்படையாகவே மார்க்சீயத்தைக் கைவிட்டதாகக் காட்டிக் கொண்டன. சாவேஸ் மார்க்சீயத்துடன் லத்தீன் அமெரிக்க விடுதலைக் குறியீடான சைமன் பொலிவரின் தேசியவாதத்தையும் இணைத்த ஒரு அணுகல்முறையைக் கைக் கொண்டார். 19ம் நூற்றாண்டில் லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு ஏகாதிபத்தியங்களிடமிருந்து விடுதலை பெற்றுத் தந்த பொலிவர் இன்றைய ஏகாதிபத்திய எதிர்ப்பின் குறியீடாக அமையமுடியும் என அவர் நம்பினார். ஃபிடல் காஸ்ட்ரோவைத் தன் முன்மாதிரியாக ஏற்றுக் கொண்டார். இந்த “21ம் நூற்றாண்டுக்கான சோஷலிசம்” என்கிற கருத்தாக்கம் ஜெர்மானிய மார்க்சிஸ்டான ஹெய்ன்ஸ் டையட்ரிச் ஸ்டெஃபானின் சிந்தனைகளை அடியொற்றியதாகக் கூறப்படுகிறது.. முதலாளியத் தனிநபர்வாதம், முன்னுரிமைகள், சுயநலம் ஆகியவற்றிற்கு மாற்றாக இது அறம் மற்றும் ஒழுக்கம் சார்ந்த செயற்பாடுகளை முன்வைக்கிறது. ஒருமுறை ஏசுதான் முதல் சோஷலிஸ்ட் என்றார் சாவேஸ். ஆனால் அரசில் கிறிஸ்தவத்தின் தலையீட்டை அவர் என்னாளும் ஏற்றுக்கொண்டதில்லை. ‘பிரதிநிதித்துவ ஜனநாயகம்’ (representative democracy) என்பதற்குப் பதிலாக, ‘பங்கேற்கும் ஜனநாயகம்’ (participatory democracy) என்கிற கருத்தாக்கத்தை இவர்கள் முன்வைக்கின்றனர். ‘சமத்துவமும்’ ‘உரிமையும்’ பிரிக்க இயலாதவை என்பது இவர்களின் இன்னொரு முழக்கம். சோஷலிசம் என்றால் எல்லா அதிகாரங்களும் அரசுக்கே என்பதல்ல என்றார் சாவேஸ். இந்த வகையில் அவர் தனிச் சொத்துரிமையையும் அவர் ஏற்பதாக அறிவித்தார். பொருளாதாரத்தில் கூட்டு முயற்சிகள் கூட்டுறவு ஆகியவற்றை பதிலாக முன்வைத்தார். இதே காரணங்களுக்காக சாவேசின் சோஷலிசத்தை முழுமையான சோஷலிசம் அல்ல என ஜேம்ஸ் பெட்ராஸ் போன்ற மரபு வழிப்பட்ட மார்க்சியர்கள் விமர்சிப்பதும் உண்டு. எதை இவர்கள் மறுக்கின்றனரோ அதில் அவர்கள் உண்மையாக இருப்பதில்லை என்கிறார் பெட்ராஸ். அரசுடமை ஆக்குதல், சந்தைக் கட்டுப்பாடு முதலியனவெல்லாம் 20ம் நூற்றாண்டு சோஷலிசத்திலிருந்து கற்றுக்கொன்டதுதான். அதெ நேரத்தில் இன்னும் பெரிய அளவில் தனியார் துறையின் ஆதிக்கமும் வெளி நாட்டு நிதி ஆதிக்கமும் இந்த நாடுகளில் இருக்கத்தான் செய்கிறது. ஒருவகையான கலப்புப் பொருளாதாரமாகத்தான் இவற்றைக் காண வேண்டும். 20ம் நூற்றாண்டு மார்க்சியம், 21ம் நூர்றாண்டு லத்தின் அமெரிக்கப் பாப்புலிசம் ஆகிவை இணைந்து உருவானதுதான் சாவேசின் கொள்கை என்பது பெட்ராசின் கருத்து. சமூக நலத் திட்டங்கள் சிறப்பாகச் செயல்பட்டாலும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் அப்படியேதான் உள்ளன என்பது அவர் வைக்கும் இன்னொரு விமர்சனம். சாவேசை விமர்சிப்பவர்களும் கூட இன்றைய சூழலில் அவர் ஏகாதிபத்தியத்தை எதிர் கொண்டு நின்ற திறத்தையும், அவரது அணுகுமுறைகளையும் பாராட்டவே செய்கின்றனர். வெனிசூலாவின் எண்ணை வளம் சாவேசுக்கு எதிரான கடும் நடவடிக்கைகளில் இறங்குவதிலிருந்து அமெரிக்காவைத் தடுத்தது. அமெரிக்காவுக்கு எண்ணை சப்ளை செய்யும் நாடுகளில் நான்காவதாக வெனிசூலா உள்ளது. எனினும் சாவேசை அதிகாரத்திலிருந்து அகற்றுவதற்கு அமெரிக்கா கடைசி வரை முயற்சித்தது. 2002ல் சாவேசின் ஆட்சியைக் கவிழ்ப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட சதியை அது வெளிப்படையாக ஆதரித்தது. எனினும் 24 மணி நேரத்தில் சாவேஸ் மீண்டும் மக்கள் ஆதரவோடு அதிகாரத்தைக் கைப்பற்றினார். தொண்டு நிறுவனங்களின் ஊடாக சாவேசை எதிர்ப்பவர்களுக்கும் அமைப்புகளுக்கும் பெரிய அளவு நிதி மற்றும் பிற உதவிகளைச் செய்தல், வெனிசூலாவின் பொருளாதாரப் பலவீனங்கள், தனியார் மூலதனங்கள் ஆகியவற்றினூடாகச் சிகல்களை உருவாக்குதல், மாநில மற்றும் உள்ளூர் நிர்வாக அளவில் எதிரணியினர் தேர்தல்களில் வெற்றி பெற உதவுதல் முதலான எல்லாத் தந்திரங்களையும் அமெரிக்கா முயற்சித்தது. எனினும் சாவேஸ் நேரடியாகப் பங்கு பெற இயலாது போன சென்ற டிசம்பர் 2012 கவர்னர் தேர்தலில் 23 மாநிலங்களில் 20ல் சாவேஸ் அணி வெற்றி பெற்றது. தனக்கு மட்டுமின்றி இன்னும் பல லத்தீன் அமெரிக்கத் தலைவர்கள் பலருக்கும் இதேபோல புற்று நோய் வந்திருப்பதைக் கண்டு இதுவும் கூட அமெரிக்கச் சதியோ எனச் சாவேஸ் சமீபத்தில் கூறியதாகவும் ஒரு செய்தி வாசிக்கக் கிடைத்தது. சாவேசின் மரணத்தை ஒட்டி அங்கே குழப்பம் ஏற்படும் சூழல் உள்ளது போலச் செய்திகளை மேற்கத்திய ஊடகங்கள் பரப்புகின்றன. இப்படியான குழப்பத்தை உருவாக்க முயன்ற இரண்டு அமெரிக்க இராணுவ அதிகாரிகள் நேற்று வெளியேற்றப்பட்டுள்ளனர். நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவே அறிகிறோம். வெனிசூலா அரசியல் சட்டத்தின்படி அடுத்த 30 நாட்களுக்குள் அதிபர் தேர்தல் நடத்தப்பட வேண்டும். தனக்கு ஏதும் நேர்ந்தால் தனது வாரிசாக தற்போதைய உதவி அதிபர் நிக்கோலஸ் மடுரோவை ஏற்கவேண்டும் எனச் சமீபத்தில் சாவேஸ் மக்களை வேண்டிக் கொண்டார். மடுரோ வெற்றி பெறும் வாய்ப்புள்ளதாகவே தெரிகிறது.
thanks to அ.மார்க்ஸ்
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment