Saturday, May 25, 2013

மைக்கல் ஏஞ்சலோ ஏன் அழுதார்?



ரெஜினால்ட் ஹொராஸ் ப்ளைத் என்ற ஆங்கில எழுத்தாளர். ஜப்பானியக் கலாசாரத்தினால் கவரப்பட்டவர். ஜென் பற்றி நிறைய எழுதியவர். ஒருமுறை அவரிடம் யாரோ கேட்டார்கள். ‘ஜென் என்கிற விஷயத்தை எங்களுக்குப் புரியும்படி ஒரே வார்த்தையில் விளக்கமுடியுமா?’ ’முடியும்’ என்றார் ப்ளைத். அவர் சொன்ன அந்த ஒற்றை வார்த்தை: ‘பர்ஃபெக்ஷன்.’ ‘ஜென் என்றால் எதையும் பர்ஃபெக்டாகச் செய்வது’ என்று ப்ளைத் குறிப்பிட்டபோது மற்றவர்கள் சிரித்தார்கள்.
‘அது எப்படி சார் முடியும்? இந்த உலகத்தில் தவறு செய்யாதவர்கள் உண்டா?’ ‘தவறு செய்யுங்கள். ஆனால் அதையும் பர்ஃபெக்டாகச் செய்யுங்கள். அதுதான் ஜென்’ என்றார் ப்ளைத். ‘நீங்கள் தோற்றுப்போனாலும், பர்ஃபெக்டாகத் தோற்கப் பழகுங்கள். தினந்தோறும் நீங்கள் செய்கிற ஒவ்வொரு வேலையும் பர்ஃபெக்டான ஒரு விஷயமாக இருக்கவேண்டும் என்று அவசியம் இல்லை. ஆனால் நீங்கள் அதைச் செய்கிற விதம் எப்போதும் பர்ஃபெக்டாக இருக்கவேண்டும். எங்கும் எதிலும் அந்த உன்னதத்தைத் தேடியே உங்களுடைய பயணம் அமையவேண்டும்.’ இதற்கு உதாரணமாக, மைக்கேல் ஏஞ்சலோவின் வாழ்க்கையிலிருந்து ஒரு சம்பவம் சொல்வார்கள். மைக்கேல் ஏஞ்சலோ அப்போது ஒரு புதிய சிலையைச் செய்து முடித்திருந்தார். அதை நன்றாக உற்றுப் பார்த்துவிட்டு லேசாகக் கண்ணீர் விட்டார். பக்கத்தில் இருந்த நண்பர் ஒருவர் கேட்டார். ‘ஏன் அழுகிறீர்கள்? சிலையில் ஏதாவது குறை தெரிகிறதா?’ ‘குறையே தெரியவில்லை. அதற்காகதான் அழுகிறேன்.’ ‘என்னய்யா இது? குறை இல்லை என்றால் ஏன் அழவேண்டும்?’ ’என்னுடைய கண்களுக்குக் குறை கண்டுபிடிக்கும் தன்மை குறைந்துவிட்டது. அதற்காகதான் அழுகிறேன்!’ என்றார் மைக்கேல் ஏஞ்சலோ.

நன்றி/ சிவா நாராயணன்.

No comments:

Post a Comment