Tuesday, October 7, 2025

Facebook/Imam Adhnan

சுயஉருவாக்க இணைச்சிதைவு வாதம் (The Self-Generated Co-Destructionims): A hypothetical conceptualization 
***
  
 உலகத்தில் இருக்கும் அனைத்தினதும் அனைவரினதும் இயங்கியலும் ஏனையவைகளின் இயங்கியலுடன் தொடர்புபட்டதாகவே உள்ளன. சரியாகச் சொல்வதானால், அனைத்தினது இருப்பும் இயங்கியலும் Co-dependent ஆகவே அமைந்துள்ளன. அனைத்தினது இருப்பும் இயங்கியலும் ஏனையவைகளில் தாக்கம் செலுத்துவதோடு ஏனையவைகளால் தாக்கமுறுகின்றன. 

இதனை சில கோட்பாடுகளும் வேறு விதங்களில் முன்வைத்திருக்கின்றன. Butterfly effect அப்படியான கருத்தமைவுகளில் ஒன்று. வண்ணத்துப் பூச்சியின் ஒரு சிறகசைப்பு பெரும் புயலையும் உருவாக்க உந்துவிசையாக அமையக்கூடும் என அக்கருத்தமைவு விளக்குகிறது. 

தங்களின் வாழ்தலுக்கான களத்தினை உருவாக்குவதில், எல்லா உயிரிகளுமே விதவிதமான முறைவழிகளைக் கொண்டுள்ளன. இரும்பை உண்ணும் நுண்ணுயிர்கள் இருக்கின்றன தெரியும? அவை நம்மைப் போலவோ அல்லது ஏனைய விலங்குகளைப் போலவோ இரும்பைக் கடித்துக் கடித்து உண்பதில்லை. அவை இரும்பணுவில் இருந்து எலக்ட்றோன்களைப் பெற்று தங்களின் உடலுக்குத் தேவையான சக்தியைப் பெற பயன்படுத்துகின்றன. அந்த நுண்ணியிர்கள், நாம் பயன்படுத்தும் இரும்பான ferrous iron (Fe²⁺) இனை ferric iron (Fe³⁺) ஆக மாற்றுகின்றன. இதனால், இந்தவகை நுண்ணுயிரிகளான பக்டீரியாக்களை iron-oxidizing bacteria என அழைக்கின்றனர். 

வேறு சில பக்டீரியாக்கள் உண்டு. அவை iron-reducing bacteria என அழைக்கப்படுகின்றன. அவை என்ன செய்கின்றன என்றால், ferric iron (Fe³⁺) ஆக இருக்கும் இரும்பணுக்களை ferrous iron (Fe²⁺) ஆக மற்றுகின்றன. அதாவது இந்த பக்டீரியாக்கள் இரும்பணுக்களுக்கு எலக்ட்றோனை கொடுக்கின்றன. இவை பெரும்பாலும் ஒக்ஸிஜன் அரிதாகக் காணப்படும் இடங்களான நிலத்திற்கு அடியில் அல்லது நீருக்கு அடியில் நிகழ்கின்றன. இதன்போது குறித்த இரும்பு நீருடன் இரசாயனவியல் தாக்கச் செயன்முறைக்கு உள்ளாகின்றன. இதன் விளைவாக இரும்பு வீழ்படிவாகி தாதுக்களாக உருமாறுகின்றன.       

நமது வாயிலும் இயற்கையாகவே பல பக்டீரியாக்கள் உண்டு. நாம் உண்ணும் உணவிலிருக்கும் sugar content இனையை அவை உட்கொள்கின்றன. அவை உட்கொள்ளும் sugar content இனை அவற்றின் உடலால் நேரடியாய் தங்களுக்குத் தேவையான சக்தியாக மாற்ற முடியாது. எனவே, அவை உட்கொள்பவைகளை தனது உடலுக்குள் நொதிக்கவைக்கின்றன (fermentation). இந்தச் செயன்முறையின் பக்கவிளைவுகளாக உருவாகும் ஒருவித அமிலத்தினை அவை வெளியேற்றுகின்றன. இந்த அமிலமே நமது பற்களில் படிந்து பற்சிதைவுகளை உண்டுபண்ணுகிறது. 

இதில் இன்னொரு சுவாரஸ்யமும் உண்டு. அந்த பக்டீரியாக்கள் வெளியிடும் அமிலங்கள், தங்களை உட்கொள்ளக் கூடிய ஏனைய பக்டீரியாக்களிடம் இருந்து அவைகளைப் பாதுகாக்கும் அரணாகவும் தொழிற்படுகின்றனவாம். எனக்கு இன்னொன்றும் தோன்றுகிறது. அந்த அமிலங்களை அவை வெளியிடுவது நமது, பற்களை சிதைக்கும் நோக்கில் அல்லவென விஞ்ஞானம் சொல்கிறது. ஆனால், நமது பற்கள் சிதைவடையும் போது பற்களில் உணவுத் துகள்கள் சிக்கித் தங்குவதற்கான வாய்ப்பு மேலும் அதிகரிக்கின்றன. இது மீண்டும் மீண்டும் பக்டீரியாக்களுக்கு சாதகமான சூழலை (self-reinforcing environment) வாய்க்குள் உருவாக்குகிறது. இப்படியான ஒரு சூழலை உருவாக்க அவை intentional ஆகவே அந்தப் பொறிமுறையில் தகவமைந்திருக்க வேண்டும் அல்லது நமது வாயினுள் இருக்கும் சூழலானது, அத்தகைய பக்டீரியாக்களையே உயிர்வாழ இடமளித்திருக்க வேண்டுமெனத் தோன்றுகிறது. 

ஒரு தொகுதி உயிரிலியான பொருட்களைச் சுற்றி ஒருவகை பக்டீரியாக்கள் தங்களின் வாழ்வை அமைத்தால், அந்த பக்டீரியாக்களைச் சுற்றி இன்னொருவகை பக்டீரியாக்கள் தங்கள் வாழ்வை அமைக்கின்றன. ஒவ்வொரு உயிரிலியான பொருட்களுடனும் இந்த நுண்ணுயிர்கள் புரியும் வினைகளால், பல விளைபொருட்கள் உருவாகின்றன. பிறகு அந்த விளைபொருட்களில் இருந்தும், அவற்றைச் சுற்றியும் மேலும் சில உயிர்கள் தங்களின் இருப்பைக் கட்டமைக்கின்றன. இவ்வாறே ஒவ்வொன்றும் மற்றவைகளின் இருப்பை அடிப்படையாகக் கொண்டு வாழ்வை அமைக்கின்றன. 

நமது உடலுக்குள் வாழும் சில பக்டீரியாக்கள், நாம் உண்பவற்றை செரிமானமடைய பங்களிக்கின்றன. அதேவேளை, அவற்றால் உருவாகும் மூலக்கூறுகளைப் பயன்படுத்தி இன்னும் சிறிய நுண்ணுயிர்கள் தங்களின் வாழ்வை அமைக்கின்றன. கடலில் உள்ள அல்காக்கள் (படிவுப் பாசிகள்) உமிழும் பொருட்களைச் சாப்பிட்டு சிறு உயிரிகள் வாழ்கின்றன. அவற்றைத் தின்று மீன்களும், அம்மீன்களைத் தின்று பெரிய உயிரிகளும் வாழ்கின்றன. இப்படி ஒரு உயிரின் செயல் மற்றொரு உயிரிக்கான வாழ்வாக கட்டமைந்திருக்கின்றன.   

துருவிய தேங்காய்ப் பூவினை ஒரு பொலித்தீன் பையில் காற்று புகாதபடி மூடி வைத்தாலும், இரு நாட்களுக்குள் உள்ளே புளுக்கள் கொதுகொதுக்க ஆரம்பித்துவிடுகின்றன. பார்த்திருக்கிறீர்களா? 

இவற்றை எல்லாம் உற்றுநோக்கிப் பார்க்கும் போது, என்ன சிந்திப்பு என்னிடம் உருவாகிறது என்றால், உலகிலிருக்கும் ஒவ்வொன்றும், அது உயிரியாக இருந்தாலும் சரி உயிரிலியாக இருந்தாலும் சரி, தங்களை அழிக்கக் கூடிய உயிரிகளையும் இனையாகப் பரிணமிக்கவே செய்கின்றன. 

இப்படிச் சொல்வதனை இன்னும் குறிப்பாக வலுப்படுதி விபரிக்க, இன்னொரு விடயத்தையும் முன்வைக்கிறேன். இதுவரை சொல்லி வந்தவைகள் எல்லாம், இயற்கையாகவே சூழலில் இருந்துவந்தவைகள். ஆனால் பிளாஸ்டிக் என்பது,  இயற்கை மூலகங்களைக் கொண்டு நாம் உருமாற்றியமைத்த செயற்கைப் பொருள். பிளாஸ்டிக் என்பது மனிதவரலாறு தொட்டு இருந்துவந்தவை அல்ல. இல்லையா?    

பிளாஸ்டிக்கினை உண்ணும் பக்டீரியாக்களும் ஃபங்கஸ்களும் கூட உண்டு. அவை பிளாஸ்டிக்கின் மீது இருவகை Enzymes புரதமூலக்கூறுகளை படியவைக்கின்றன. அது பிளாஸ்டிக்கினை சிதைத்து அதன் அடிப்படை மூலக்கூறாக (chemical building blocks)  மாற்றுகின்றன. அந்த மூலக்கூறுகளில் இருந்து தங்களுக்குத் தேவையான கார்பனையும் ஆற்றலையும் பெற்றுக் கொள்கின்றன. இன்னும் சிலவகை பக்டீரியாக்கள் நேரடியாகவே நெகிழ்வான பிளாஸ்டிக் கூறுகளை தின்று செமிக்கின்றனவாம். 

அதுபோக, பிளாஸ்டிக்குளை நேரடியாகக் கடித்துத் தின்று செரிமானம் கொள்ளும் பலவகைப் புழுக்களையும் விஞ்ஞானிகள் அடையாளம் கண்டிருக்கிறார்கள். அந்தப் புளுக்களின் உடலுக்குள் இருக்கும் பக்டீரியாக்கள் அவற்றை செரிமானம் செய்ய உதவுகின்றன. அந்த பக்டீரியாக்களின் செயன்முறையில் இருந்து கிடைக்கும் பக்கவிளைபொருளையே அந்தப் புளுக்கள் தங்களுக்குத் தேவையான சக்தியாகப் பயன்படுத்திக் கொள்கின்றனவாம்.

ஆக, புதிதாக இருப்புக் கொள்கின்றவைகளைக் கூட சிதைக்கும் உயிரிகளும் பரிணமித்துதான் இருக்கின்றன. இந்தப் புள்ளியில் இருந்து, எனது சிந்திப்பினை ஒரு ஹைபொதிஸிஸாக வடிவமைத்து முன்வைக்கலாம் எனத் தோன்றுகிறது. 

The hypothetical conceptualization: “ஒவ்வொரு உயிரிலியான பொருளும், உயிரினமும் தங்களை சிதைக்கக் கூடிய நிலைமைகளை உருவாக்குகின்றன. ஒவ்வொன்றும் தங்களை அழிக்கக் கூடியவைகளை, ஒரு கட்டத்தில், புதிதாக ஏற்படுத்துகின்றன அல்லது புறத்திலிருந்து கவர்ந்திழுக்கின்றன. இதனைத் தத்துவார்த்தமாகச் சொல்வதென்றால், ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட அமைப்பின் இருப்பானது அவற்றை ஒழுங்கீனமாக்கக் கூடிய வாய்ப்புகளை உருவாக்குகிறது. ஒன்றின் உருவாக்கமும் சிதைவும் இணை பரிணமிப்புகள்தான். ஒரு முறைமையே அதற்கான எதிர்முறைமைகளை (counter-systems) ஏற்படுத்துகிறது.”

இப்படி ஒரு கருதுகோளை முன்வைக்கும் போது ஒரு கேள்வி எழுகிறது. அப்படி என்றால் அனைத்தும் சாவதற்காகவா இயங்குகின்றன? அப்படி நிகழ்வதையா நாம் அவதானிக்கிறோம்? இல்லையே..

ஒரு உயிரியால் இன்னொன்று அழிக்கப்பட முனைகையில், அந்த உயிரியிடமிருந்து தன்னைப் பாதுகாத்துக்கொள்ள புதிதாகத்  தன்னைத் தகவமைக்கிறது. புதிய திறன்களைத் தன்னுள் விருத்தி செய்துகொள்கிறது. விருத்தி செய்து கொள்ளாதவைகள் அழிந்து போகின்றன. இப்படி அது புதிய திறன்களை விருத்தி செய்து தகவமைந்து கொண்டால், இதனை அழித்து வாழும் அந்த உயிரியால் வாழ முடியாத சூழல் உருவாகிறது. எனவே இந்த உயிரி, தானும் வாழ்வதற்கான புதிய திறன்களை தன்னுள் விருத்தி செய்து தகவமைய வேண்டும். இப்படி தன்னைப் புதிய திறன்களைப்பெற்று விருத்தியடைய, அதுவும் தாக்குதலுக்கு உள்ளாகும் சவாலான நிலமைகளுக்கு ஆட்பட வேண்டும். 

ஒவ்வொன்றும் புறத்தால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகின்ற போதே புதிய திறன்களை தன்னுள் விருத்தி செய்கின்றன. எனவேதான், அந்த உயிரி தன்னை சிதைக்கக் கூடியவைகளை ஈர்க்கின்றன. தன்னுள் எதிர்ப்புத் திறன்களை உருவாக்கி புதிய வழிமுறைகளுடன்  பரிணமித்து இயங்குகின்றன. அப்படிச் செய்யாவிடில், அந்த உயிரிகளின் இருப்பும் அழிந்து போகிறது. 

தவளைகளை வேட்டையாடும் பாம்புகளையே நாம் அதிகம் பார்த்திருக்கிறோம். ஆனால், பாம்புகளே வேட்டையாடமல் விலகிச் செல்லும் தவளைகளும் உண்டு. அந்தத் தவளைகளின் வெளிப்புற உடல் அதிகம் விஷத்தன்மை கொண்டவை. அப்படியான விஷங்களை தங்களின் தோல்களில் சேமிக்க, அந்தத் தவளைகள் என்ன செய்கின்றன தெரியுமா? ஒருவித விஷம் கொண்ட சிற்றெறும்புகளை உட்கொண்டு, அவற்றின் விஷமூலக்கூறுகளை தங்களின் உடலில், செறிவுகொண்ட இன்னொரு விஷங்களாக சேமிக்கின்றன.

*

இந்தக் கருத்தமைவை விபரிக்கும் போது, எனக்குள் இயங்கும் இந்த சிந்திப்புக் போக்கினையும் அகநோக்கி அவதானிக்கிறேன். டார்வினின் கூர்ப்பியல் கோட்பாடு முன்வைக்கும் கருத்தமைவுகளும், கார்ல் மார்க்ஸ் முன்வைத்த பொருள்மய்யவாத இயக்கவியலும் (materialistic dialectics) இணைந்து அதற்குள் தொழிற்படுவதை உணர முடிகிறது. இப்படிச் சொல்வதால் நானுமொரு மார்க்ஸிஸ்ட் என கருதிவிட வாய்ப்புண்டு.

நாம் அனுபவம் கொள்ளும் பௌதீக உலகத்திருப்பவைகளே நம்மிடம் சிந்திப்பும், பிரக்ஞையும், பெறுமானமும் உருவாக நிபந்தனையாகின்றன என்பது ஓரளவு உண்மையானதுதான். அனால், அதுவே நாம் அனுபவம் கொள்ளும் முழுமொத்த எதார்த்தமும் கிடையாது. நமது சிந்திப்பும் பிரக்ஞையுமே புற எதார்த்தங்களைக் கட்டமைக்கின்றன எனும் கருத்துமய்யவாதமும் அப்படி ‘ஓரளவு’ உண்மையானவைதான். 

ஒரு பொருளின் பெறுமதியானது, இன்று அதன் உற்பத்திக்கான மூலதனங்களால் மாத்திரம் தீர்மாணிக்கப்படுவதில்லை. அவற்றின்மீது கட்டமைக்கும் கருத்தியல் ரீதியான குறியீட்டுப் பெறுமதியும் சேர்ந்தே தீர்மாணிக்கின்றன. விநாயகர் சிலை கருத்துமய்யவாதத்தின் உருவாக்கமா அல்லது பொருள்மய்யவாதத்தின் உருவாக்கமா? இரண்டின் கலவை என்பதே எனது நிலைப்பாடு. ஒரு பௌதீகப் பொருள் அதன் சுயதன்மையுடன் மாத்திரம் நமக்கு அனுபவமாகி, நம்மிடம் சிந்திப்பையும் பிரக்ஞையையும் உருவாக்குவதில்லை. அந்த பௌதீகப் பொருள் சார்ந்து ஏலவே கட்டமைக்கப்பட்டிருக்கும் கருத்தியல்களுடன் இணைந்தே அனுபவமாகிறது. 

இன்று சைக்கிளை மிதித்து சுற்றுபவர்களுக்கு அது வெறும் இடப்பெயர்ச்சிக்கான சாதனமாக மாத்திரம் அனுபவம் ஆவதில்லை. சைக்கிள் ஒடுவது ஒரு பொழுதுபோக்காக, ஒரு உடற்பயிற்ச்சிக்கான கருவியாக, கார்பன் கழிவிலிருந்து சூழலை பாதுகாப்பதாக, எந்தவகை சைக்கிளை ஓடுகிறோம் என்பதிலிருந்து கிடைக்கும் ஒருவித எலைட் பெருமையுணர்வுக்காக, மினிமலிஸ்ட் வாழ்வியல் முறையாக, கொவிட் லொக்டவுன் காலங்களில் ட்ரஃபிக் பொலிஸிடமிருந்து தண்டப்பணச் சீட்டை பெறாமல் இருப்பதற்கானதாக எனப் பலவாறான அனுபவப் பிரங்கைகளை நம்மிடம் வரித்துவிட்டிருக்கிறது. நம் சுயம்களையும் புறஎதார்தங்களையும் கட்டமைக்கும் செயன்முறையின் மற்றமைகளாக பொருள்மய்யவாதம், கருத்துமய்யவாதம் இரண்டும் இணைந்தே தொழிற்படுகின்றன.  

எப்படி உயிரியல் கலங்கள் தங்களுக்கான முரண்பாட்டுச் சவால்களை உருவாக்கி புதிய ஒழுங்கில் பரிணமிக்கிறதோ, அதேபோன்றே மனித சிந்தனைகளும் இயங்குதலில் இருக்க அவை பரிணாமம் அடைய வேண்டும். அப்படிப் பரிணாமம் அடைவதற்கு சவாலான சூழமைவுகளுடனும் நிலவரங்களுடனும் முரண்பாட்டு மோதலுக்கு உள்ளாகின்றன. உள்ளாகவேண்டியும் இருக்கின்றன. இதனாலேயே அதிகமும் முரணுரையாடல் என்பதை முன்வைத்து எனது இயங்கியல் அமைகிறது. மனிதன் முதற்கொண்டு ஏனைய உயிரிகள், உயிரிலிகள் என ஒவ்வொன்றும் தங்களின் இருப்பைத் தொடர்ந்தும் எடுத்துச் செல்ல, தொடர்ந்தேர்ச்சையாக தங்களின் சிதைவு-உருவாக்க இயங்கியலை முன்னெடுக்கின்றன. Co-destructive, co-evolutionary process நிகழ்ந்தவண்ணமே உள்ளது. 

இருப்பு என்பது ஒரே தன்மையில் தொடர்ந்தும் பேணிப்பாதுகாக்க வேண்டிய நிலை அல்ல. அது தொடர்ந்தும் மாற்றமுறும் இயங்கியல் தன்மை கொண்டது. ‘சுயஉருவாக்க இணைச்சிதைவு’ எனும் செயன்முறையினூடாக தொடர்ந்தும் தன்னை இன்னொன்றாக பரிணமிக்கச் செய்யும் இயல்புகொண்ட நிகழ்வம்சம். பௌதீகவியல், உயிரியல், கருத்தியலென ஒவ்வொன்றும் தனது இயங்கியலுக்குள் தன்னைச் சிதைக்கக் கூடியவைகளுக்கான வரைவையும் கொண்டிருப்பவைகள்தான். இந்தச் சிதைவாக்கம் என்பது, வெளியே இருப்பவைகளை எதிர்கொள்ள முடியாமல் தோல்வியடைவதன் விளைவு கிடையாது. அச்சிதைவாக்கம் என்பது, ஒவ்வொன்றினதும் இணைபரிணமிப்பை உந்தித்தள்ளும் உள்ளார்ந்த படைப்பாற்றலது. ஆக, ஒன்றின் சிதைவிற்கான அச்சுறுத்தலானது அதன் புதிய பரிணாம எழுச்சிக்கான ஆற்றலைப் பிறப்பிக்கும் இயந்திரமாகவே அமைகிறது.           
 
*
இந்தக் கட்டுரை சார்ந்த சுவார்ஸ்யத் துணுக்கொன்று. நேற்று சரியான பல்வலி. இப்படி வலிக்கிறதே எனத் தாங்க முடியாமல், ஏன் பல் வலிக்கிறது என்பதற்கான விஞ்ஞான நியாயங்களைத் தேடத் துவங்கியிருந்தேன். அங்கிருந்து உருவான சிந்திப்புகளின் விளைவுதான் இப்பிரதி. வாய்க்குள் இருக்கும் பக்டீரியாக்களை வைத்துக் கொண்டு இவன் ஏதோ செய்யப் போகிறான்டோவ் என எனது மூளைக்குத் தெரிந்ததும், கொஞ்சம் வலியைக் குறைத்துணர ஏற்பாடு செய்திருந்தது.

Saturday, March 29, 2025

ராஜாதி ராஜன் இந்த ராஜா (இளையராஜா)

கோரஸ் பாடும் பெண் கொடுத்த ஐடியா
கையில் காசில்லாமல் 8 கிமீ கால்நடையாக நடந்த #இளையராஜா

வாழ்க்கையில் உயர்வு என்ற விஷயம் யார் மூலம் எப்போது கிடைக்கும் என்றெல்லாம் நாம் கணிக்க முடியாது. இதற்கு இசைஞானி இளையராஜா வாழக்கையையே உதாரணமாகக் கூறலாம். இன்றைக்கு நாம் அண்ணாந்து பார்க்கக்கூடிய இடத்தில் இருக்கும் இளையராஜாவிற்கு ஆரம்பக்காலத்தில் சரியான பாதையைக் காட்டியவர் கோரஸ் பாடக்கூடிய #கமலா என்ற பெண்தான்.

இளையராஜா, அவரது அண்ணன் ஆர்.டி.பாஸ்கர், அவரது தம்பி கங்கை அமரன் மூவரும் சினிமாவில் இசையமைக்க வேண்டும் என்பதற்காக பண்ணைபுரத்தில் இருந்து சென்னைக்கு வந்தனர். சினிமா வாய்ப்பு கிடைப்பதற்கு முன்பு நாடகங்களுக்கு இசையமைத்துக் கொண்டிருந்தனர். அந்த வகையில், ஓ.ஏ.கே. தேவர் தயாரித்த ஒரு நாடகத்திற்கு மூவரும் இசையமைக்கின்றனர். அந்த நாடகத்திற்காக பாட வந்தவர்தான் #கமலா. அவர் பாடகி என்பதால் வந்தவுடனேயே இவர்களது இசைத்திறமை மற்றும் இசைக்கருவிகளை கையாளும் விதத்தைப் பார்த்து அசந்துவிட்டார். உடனே, இளையராஜவை அழைத்து ஏதும் படங்களுக்கு இசையமைத்துள்ளீர்களா என்று கேட்கிறார். சினிமாக்கு இசையமைக்க வேண்டும் என்பதற்காகத்தான் ஊரில் இருந்து கிளம்பி வந்தோம், இன்னும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்று இளையராஜா கூறுகிறார்.

இந்தக் கமலா எச்.எம்.வி நிறுவனம் உருவாக்கும் தனிப்பாடல்களிலும் பாடுவார். இசை உலகத்தில் அவரது பெயரே எச்.எம்.வி. கமலாதான். கர்நாடக சங்கீதம், மேற்கத்திய இசையெல்லாம் தெரியுமா என்று கமலா இளையராஜாவிடம் கேட்க, அவர் தெரியாது எனக் கூறுகிறார். மேலும், எங்களுக்கு அதைக் கற்றுக்கொள்ள வாய்ப்பு அமையவில்லை. உங்களுக்குத் தெரிந்த ஆட்கள் இருந்தால் சொல்லுங்கள், நாங்கள் கற்றுக்கொள்கிறோம் என்கிறார்.

நிறைய மேடைகளில் தன்ராஜ் மாஸ்டரை தன்னுடைய குரு என்று இளையராஜா கூறுவார். அந்த தன்ராஜ் மாஸ்டரை இளையராஜாவிற்கு பரிந்துரைத்தவர் எச்.எம்.வி. கமலாதான். கமலாவின் பரிந்துரையைத் தொடர்ந்து, தன்ராஜ் மாஸ்டரிடம் சென்று இசை கற்க ஆரம்பித்தார் இளையராஜா. அங்குதான் கர்நாடக இசை, மேற்கத்திய இசையை அவர் கற்றார். சில நாட்களில் கையில் காசில்லை என்றால் வடபழனியில் இருந்து மைலாப்பூருக்கு 8 கிமீ கால்நடையாகவே நடந்து செல்வாராம். அவரிடம் இசை கற்க ஆரம்பித்த கொஞ்ச நாட்களிலேயே மிகப்பெரிய ஜீனியஸிடம் நாம் இசை கற்கிறோம் என்பது இளையராஜாவிற்கு தெரிந்துவிட்டது.

தூக்கத்தில் எழுப்பி கேட்டால்கூட இப்போது இசை நோட்ஸ் கொடுப்பார் இளையராஜா. ஆனால், தன்ராஜ் மாஸ்டரை சந்திக்கும்வரை இளையராஜாவிற்கு இசை நோட்ஸ் எழுதவே தெரியாதாம். 

ஒருநாள் ஜி.கே.வெங்கடேஷ் என்று ஒரு இசையமைப்பாளர் இசையமைக்கும் படத்திற்கு இசைக்கருவிகள் வாசிக்க தன்ராஜ் மாஸ்டர் செல்கிறார். அப்போது இளையராஜாவையும் உடன் அழைத்துச்செல்கிறார். அன்று பணிகள் முடிந்த பிறகு தன்னுடைய மாணவனை உதவியாளராகச் சேர்த்துக்கொள்ளும்படி பரிந்துரை செய்கிறார். அதன் பிறகு, ஜி.கே.வெங்கடேஷிடன் உதவியாளராக பொன்னுக்கு தங்க மனசு படத்தில் இளையராஜா வேலை செய்கிறார். அதன் பிறகு, அந்தப் படத்தை இயக்கிய தேவராஜ் மோகனின் அடுத்த படமான அன்னக்கிளி மூலமாக இளையராஜா இசையமைப்பாளராக அறிமுகமானார். 
பஞ்சு அருணாச்சலம்தான் அந்த வாய்ப்பை அவருக்கு வழங்கினார். கமலா மூலமாக தன்ராஜ் மாஸ்டரின் அறிமுகம், அவர் மூலமாக ஜி.கே.வெங்கடேஷின் அறிமுகம், அவர் மூலமாக தேவராஜ் மோகன் அறிமுகம், அவர் மூலமாக பஞ்சு அருணாச்சலம் அறிமுகம், அவர் மூலமாக பட வாய்ப்பு, அதன் மூலம்தான் மாபெரும் இசையமைப்பாளராக இளையராஜா அறிமுகமானார்.

இன்று இசை தேவதை போற்றும் #இசைஞானி

இது ஒரு face book பதிவு; இதை Prashantha Kumar என்பவர் தான் எழுதியதாக அவர் பக்கத்தில் பதிந்திருந்தார்.